15.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
மருத்துவர்களோ, அவனின் பாதுகாவலர்களோ எவ்வளவு சொல்லியும் ஈத்தன் கேட்கவில்லை.
இரவு முழுவதையும் அவசர சிகிச்சை பிரிவிற்கு முன்புறம் இருந்த நாற்காலியிலே தான், அமர்ந்தே கழித்து இருந்தான்.
Angioplasty and Stenting முறையில், இதயத்தில் இருந்த இரத்த அடைப்புகளை எடுத்திருந்ததால், பல மணிநேரம் கடந்தும், நோய் தொற்றிற்கு பயந்து யாரையும் உள்ளே விடவில்லை. அவருக்கு வயது கூட என்பதால் தான் கூடுதல் கவனம். தொடர் மருத்துவ கண்காணிப்பிலேயே வைத்து இருந்தனர்.
அதில் தான் உள்ளே நிலைமை என்ன ஏதென்று தெரியாமல், அப்படி தவித்துக்கொண்டு கிடந்தான் ஈத்தன்…
கண்ணால் பார்த்திருந்தால் ஆவது சற்று தேறியிருந்திருப்பான்.
ஒருவழியாக பதினெட்டு மணி நேரம் கழித்து உமையாள் கண்விழித்து விட்டார் என்றும், அவர் நல்ல நினைவுடன் இருப்பதாகவும் வந்து கூறிய மருத்துவர்கள், இரவு நேரில் பார்க்கலாம் என்றுவிட்டு செல்ல…
ஈத்தனின் சுவாசம் அப்பொழுது தான் சற்று சீரானது… இரவு எப்பொழுது வரும் என்று அவன் காத்திருக்க…
மாலை சித்ரலேகா, ஆப்ரஹாம் மற்றும் அவர்கள் இருவரின் இரண்டு பிள்ளைகள் என்று நால்வரும் சென்னை வந்திறங்கி, மருத்துவமனையை அடைந்திருந்தனர்.
‘எவனுக்கு எப்பொழுது என்ன ஆகும், அதை எப்படி நாம் பணமாக்கலாம்’ என்று வெளியே கேமிராவுடன் நின்றிருந்த சில மிடியா கழுகுகள், ஏர்போர்ட் தொடங்கி மருத்துவமனை வாசல் வரை, அவர்களின் வரவுகளை புகைப்படங்களாக சேகரித்துக்கொண்டு, மேலும் அவர்களை வட்டமிட்டுவிட…
ஈத்தனின் பாதுகாவலர்கள் வந்து அவர்களை உள்ளே அழைத்துச்சென்றனர்…
சித்ரலேகா நேராக சென்று மருத்துவரை பார்த்து, உமையாளின் நிலையை கேட்டறிந்தப்பின்பு தான் அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தார்.
அவர்களின் வரவை உணர்ந்தாலும் ஈத்தன் தன் தலையை நிமிர்த்தவே இல்லை…
என்ன முயற்சி செய்தாலும், எப்பொழுதுமே இயல்பாக, அவனால் அவர்களுடன் சென்று பேச முடிவதில்லை…
அவர்களாக வந்து பேசினால் தான் பேசுவான்…
கவனிக்காதவாறே முள்ளில் அமர்ந்திருப்பவன் போல் அமர்ந்திருந்தவனை…
தூரத்தில் இருந்தே கண்டு “ஹே! ஈத்தன் ப்ரோ…” என்று பிள்ளைகள் இருவரும் ஓடிவந்து பிடித்துக்கொண்டனர்.
வேண்டாம் என்று பிடித்து தள்ளிவிடவா முடியும். அதுவும் ஈத்தனால்.
பெரியவனுக்கு ஒன்பது வயது, சிறியவளுக்கு ஏழு வயது தான் இருக்கும்…
“ஹே படீஸ்…” என்று எழுந்த ஈத்தன், அவர்களின் உயரத்திற்கு ஏற்ப குனிந்து, வரவேற்பாக இருவரையும் தன் தோளுடன் சேர்த்து அணைத்து விடுவிக்க…
“Is Grandma Okay?” என்று இருவரும் விசாரிக்க ஆரம்பித்தனர்.
அவர்களுக்கு ஈத்தன் பதில் கூறிக்கொண்டு இருக்கும் போதே, அங்கு வந்த சித்ரலேகா, “அம்மாக்கு ஏற்கனவே அட்டாக் வந்தது உனக்கு தெரியுமா ஈத்தன்? ஏன் என்கிட்ட சொல்லலை? எவ்வளவு பெரிய விஷயம்…” என்றார் எடுத்ததும்.
அதற்கு, “நோ மாம். எனக்கும் இப்ப தான் தெரியும்” என்ற ஈத்தன்… ஆப்ரஹாமையும் தோளுடன் அணைத்து விடுவிக்க…
சித்ரலேகா, “நேத்து ஏன் எனக்கு லேட்டா இன்ஃபார்ம் பண்ண ஈத்தன்… அதுவும் மேனேஜர் விட்டு…” என்று அடுத்த விசாரணைக்கு தாவ…
அதற்கு, “சாரி மாம்” என்ற ஈத்தன் அத்துடன் அமைதியாகிவிட்டான்.
இதற்கு மேல் அவன் பேச மாட்டான் என்பது புரிய… ஆப்ரஹாம் வேறு விஷயங்களை பேச ஆரம்பித்தார்…
சொந்தம் என்று இல்லாது, தொழில் ரீதியாக ஒரு நல்ல ஹாலிவுட் டைரக்டர் என்னும் முறையில், அவருக்கு ஈத்தனுடன் நல்ல பழக்கம் இருந்தது.
சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த மருத்துவர், அத்தனை பேர் இருப்பதை பார்த்து, இரண்டு மூன்று பேராக பிரிந்து, உமையாளை சென்று பார்க்கக்கூறினார்…
அதற்காகவே காத்திருந்த ஈத்தன் உள்ளே செல்ல பார்க்க… அவனுக்கு முன்பாக சித்ரலேகா சென்றுவிட்டார்… அவரை தொடர்ந்து பிள்ளைகளும் ஓடிவிட… ஈத்தன் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு அப்படியே நின்று விட்டான்…
என்று அவன் உணர்வுகளை அவர் புரிந்துக்கொண்டு இருக்கின்றார்…
வெளியே பார்க்க அமைதியாக இருப்பது போலிருந்த அவன் முகத்தினால், இறுதிவரை உள்ளுக்குள் தவித்துக்கொண்டு இருக்கும் ஈத்தனை யாராலும் அறிய முடியாமலே போனது…
அவர்கள் வெளிவந்த பிறகு ஆப்ரஹாம் அவனை உள்ளே செல்ல உடன் அழைத்தார்…
மெல்லிய புன்னகையுடன், “நீங்க போயிட்டு வாங்க ஆப்ரஹாம்” என்று அவரை அனுப்பிய ஈத்தன்… இறுதியில் தான் உள்ளே நுழைந்தான்…
அங்கு அவனுடைய வரவை எதிர்ப்பார்த்தப்படியே இருந்த உமையாள் அம்மாவின் முகத்தில், அவனுக்கு தைரியம் அளிக்கும் விதமாக மெல்லிய கீற்றாக ஒரு புன்னகை… அவருக்கு அவனை தெரியாதா?
அதில், “பாட்டி…” என்றப்படியே அவரிடம் ஓடிச்சென்ற ஈத்தன்… தோள்பட்டையில் கட்டுடன்… உடலில் இணைக்கப்பட்டிருந்த பல உபகரணங்களுடன் இருந்தவரை கண்டு, கலங்கிய கண்களுடன், “ரொம்ப வலிக்குதா பாட்டி… சாரி…” என்றவன்… எங்கே தான் தொட்டால் அவருக்கு வலிக்குமோ என்று தொடாமல் நிற்க…
தனக்கு மறுபக்கம் வருமாறு அவனுக்கு சைகை செய்தவர்… அப்பக்கம் இருந்த கரத்தை மெல்ல தூக்கி அவனை தொட வர…
அப்படியே கீழே முட்டிப் போட்டப்படியே… அவரின் அக்கரத்தினை தன்னிரு கரம் கொண்டு ஏந்திக்கொண்டான் ஈத்தன்…
“பயந்துட்டயா சமரா…” என்று மெல்ல கேட்டவர், “பாட்டிக்கு ஒன்னும் இல்லை ஐயா… உன்னை தனியா விட்டுட்டு நான் எங்க போயிட போறேன்…” என்றார், அந்நிலையிலும் திடமாக…
அதற்கு ஈத்தன் எதுவும் பதில் கூறவில்லை…
தொண்டையெல்லாம் அவனுக்கு அடைத்துவிட்டு இருந்தது…
உமையாளின் கரத்தினை அப்படியே தன் முகத்தில் பதித்துக்கொண்டான்….
“இங்க பாரு சமரா… எனக்கு ஒன்னுமில்லை…” என்றவர்…
அவனின் உள்ளே சென்றுவிட்ட விழிகளை பார்த்து, “ஏன்யா இன்னும் சாப்பிடலையா நீ… பசி தாங்க மாட்டியே நீ… போ… முதலில் சாப்பிட்டு வா…” என்று அவனை விரட்டினார்…
“போறேன் பாட்டி… போறேன்…” என்றவன் மருத்துவர் வரும் வரையிலுமே அங்கிருந்து நகரவில்லை…
“என்ன யங் மேன்… இப்போ ஹேப்பியா… பாட்டி என்ன சொல்றாங்க…” என்றப்படியே வந்த மருத்துவர்…
உமையாளை ஒருமுறை பரிசோதித்துப் பார்த்து… செவிலியரிடம் அடுத்த டோஸ் வலிநிவாரணியை அவருக்கு செலுத்த கூறிவிட்டு…
ஈத்தனிடம், “நாளைக்கு ஐசியூவில் இருந்து ஷிஃப்ட் பண்ணிடலாம். பட் நெக்ஸ்ட் வீக் தான் டிஸ்சார்ஜ்”, என்றவர் தொடர்ந்து. “இப்ப அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். மார்னிங் பார்க்கலாம் வாங்க ஈத்தன்” என்று அவனை வெளியே அழைக்க…
உமையாளிடம், “இங்க தான் நான் இருக்கேன் பாட்டி. காலையில் வரேன்” என்றவன், அவர் அடுத்து பேச வருவதை யுகித்து, “இங்கிருந்து நேரா சாப்பிட தான் போவேன் பாட்டி. பிராமிஸ்” என்றான்.
அதில் திருப்தியான உமையாள் அம்மா, “நல்லா தூங்கவும் செய்யனும் சமரா…” என்று அவனை அனுப்பி வைத்தார்.
மகள் செய்ய தவறிய கடமையை இந்த நிமிடம் வரை அவர் செய்துக்கொண்டு இருக்கிறார்.
ஈத்தன் வெளியே வரவும் சித்ரலேகா, “வீட்டுக்கு கிளம்பலாம் ஈத்தன்.. மார்னிங் வரலாம்..” என்று அழைத்தார்.
எப்படியும் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவரால் இங்கு தங்க முடியாது. அதுவும் நீண்ட தூர பயணம் என்பதால் ஈத்தன், “நீங்க இப்ப கிளம்புங்க மாம். நான் வரேன். எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்று அவர்களை அனுப்பிவிட்டவன்… அங்கேயே விசிட்டர் அறையில் இருந்துக்கொண்டான்…
மறுநாள் உமையாளை சொன்னபடி ஐசியூவில் இருந்து மாற்றிவிட… அவரை பார்த்துவிட்டு ஆப்ரஹாம் பிள்ளைகளுடன் கிளம்பிவிட்டார்… அவர்கள் மூவருக்குமே சென்னை சீதோஷ்ண நிலை சுத்தமாக ஒத்து வரவில்லை. உடன் அவருக்கு அங்கு படப்பிடிப்பு பணியும் இருந்தது.
சித்ரலேகா மட்டும், உமையாள் மருத்துவமனையில் இருந்து வீடு வரும் வரை இருந்துவிட்டு கிளம்பினார்.
மருத்துவர்கள் இனி உமையாள் அம்மாவுடன் செவிலியர்கள் யாரும் உதவிக்கு துணைக்கு இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். வேலை பளுவோ, மன அழுத்தமோ எதுவும் அவருக்கு இனி இருக்கவே கூடாது. உணவு கட்டுப்பாடு மற்றும் சிறு சிறு பரிந்துரை செய்யப்படும் உடற்பயிற்சிகள் அவசியம் என்று நிறைய கூறி அனுப்பி இருக்க…
அனைத்து பொறுப்பினையும் தன் கையில் எடுத்துக்கொண்ட ஈத்தன்… உமையாளையும் மருத்துவர்கள் கூறியப்படியே நன்றாக பார்த்துக்கொள்ள… அவரும் நன்றாக ஒத்துழைப்பு தந்தார்...
அதில் மெல்ல உடல்நிலை தேறி வந்த உமையாள் அம்மையார் செய்த முதல் வேலை ஈத்தனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தது தான்…
‘தாயிற்கு பிறகு தாரம்’ என்னும் போது, தான் இருக்கும் போதே அவனுக்கான அடுத்த பிடிப்பை ஏற்படுத்திவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு இருந்தார்…
அதில் ஈத்தனுக்கு மயக்கம் வராத குறைதான்…
📌 Next UD link
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/153.html
கருத்துகள்
கருத்துரையிடுக