18.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
தயாராக இருந்த மருத்துவர்கள் ஓடிவந்து உமையாளை சூழ்ந்துக்கொண்டனர்…
ஈத்தனை விலக்கி விட்டவர்கள்…
விடுவிடுவென்று அவரின் மார்பில் அழுத்தம் கொடுத்து, முதல் கட்ட சிபிஆர் செய்துப்பார்த்துவிட்டு…
இறுதியாக டிஃபிபிரிலேட்டரை கொண்டு வந்து அவரின் மார்பில் வைத்து, மின்சாரத்தை செலுத்தி பார்க்க… உமையாளிடம் சிறு அசைவும் இல்லை…
மேலும் இரண்டு முறை முயன்றும்… ஒரு பயனும் இல்லை…
இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது…
அதில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள்… ஈத்தனை திரும்பி பார்க்க…
நிதர்சனத்தை அவனால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
உமையாளின் இரண்டு கரத்தினையும் பிடித்து அதில் முகத்தை புதைத்துக்கொண்டவன்… அழுத அழுகையில்…
குறிஞ்சிக்கெல்லாம் இதயமே நின்றுவிடும் போல் இருந்தது…
அதற்குள் அவனை சூழ்ந்துக்கொண்ட அவனின் பாதுகாவலர்களும், மேனேஜர்களும், அவனுக்கு ஆறுதல் கூறி… அவனை உமையாளிடம் இருந்து பிரித்தெடுக்க…
“சாரி ஈத்தன்…” என்ற மருத்துவர்கள், “ஹாஸ்பிடல் ப்ரோசியூஜர்ஸ் கொஞ்சம் இருக்கு…” என்றுவிட்டு உமையாள் இருந்த ஸ்டெச்சரை இறக்கி, மருத்துமனைக்குள் தள்ளிக்கொண்டு செல்ல…
குறிஞ்சிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…
அவ்வளவு உயிர்ப்புடன் அவளுடன் பேசிய ஈத்தனின் இந்த முகம்… அவளுடைய கண்களில் இருந்து விடாமல் நீரை பொழிய வைத்தது…
அவனை நெருங்கி அவள் பேசம் சூழ்நிலையும் அங்கு இல்லை…
நிறையப்பேர் அவனை சூழ்ந்துக்கொண்டிருந்தனர்…
சில நிமிடங்களில் அங்கு திபுதிபுவென்று போலீசார்கள் பலர் வந்து இறங்க…
மீடியாவும்… மக்களும் சூழ…
ஈத்தனின் உயரம் குறிஞ்சிக்கு அப்பொழுது தான் மெல்ல புரிய ஆரம்பித்தது…
எந்த படத்தை அவள் பார்த்து இருக்கிறாள்… அதில் வரும் பாட்டை கேட்டெல்லாம் ரசிக்க… அவள் பாடே தினம் தினம் பெரும் பாடாக அல்லவா இருக்கிறது…
அதற்குள் அவளை நெருங்கிய ஒரு காவலர், “இங்க ஏன்மா நிக்கிற… கிளம்பு… கிளம்பு…” என விரட்ட…
பயத்தில் வெளியே ஓடிவந்துவிட்டாள்…
நல்லவேளையாக ஈத்தன் வீட்டில் அவள் தன் கைப்பையினை கடைசி வரை தோளில் இருந்து இறக்கி வைக்கவே இல்லை…
அதில் அங்கிருந்து பேருந்தை பிடித்தவள்… தன்னுடைய மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்துவிட்டாள்…
அவ்வளவு நேரமும் ஈத்தன் குறித்தே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு… தன்னுடைய நிலை அப்பொழுது தான் உரைத்தது…
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை…
ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நின்றுவிட்டாள்…
இன்று நேற்றா இது நடக்கிறது…
அவள் பிறந்ததில் இருந்தே இதே கதை தானே…
விடியலே இல்லாத உலகம்…
ஏமாற்றத்தை மட்டுமே தரும் வாழ்க்கை…
இனி என்ன செய்வது…?
ஈத்தனிடம் எப்படி சென்று நிற்பது? அவன் வீட்டிலேயே துக்கம் நடந்திருக்க… மனசாட்சி இடம் கொடுக்கவில்லை… எரிகின்ற வீட்டில் பிடுங்கும் கூட்டத்தை சேர்ந்தவள் அவள் இல்லையே…
மீண்டும் அவளுக்கு ஈத்தனின் நினைப்பு வர, “பாட்டி மேல ரொம்ப பாசம் போல… பாவம் சமரா சார்…” என்று நினைத்தவள்… இயந்திரம் போல் அங்கிருந்த மெஸ்ஸிக்குள் நுழைந்தாள்…
வயிறு உள்ளுக்குள் காந்தி… உணவை கேட்டது…
மனதிற்குள் ஆயிரம் கஷ்டங்கள் நஷ்டங்கள் இருந்தாலும்… இந்த பசி மட்டும் வராமல் நிற்பதில்லையே…
அவள் எத்தனையோ நாட்கள் அதனை நினைத்தது உண்டு…
யதார்த்தம் பழகியவள், விடுவிடுவென்று அள்ளி சாப்பிட்டாள்…
அவளுக்கு இதுவரை கிடைத்த ஒரே அதிர்ஷ்டம் அது தான்…
மீந்து போனதையும், சத்துணவையும் மட்டுமே, அதுவும் பல நாட்கள் வயிறு நிறையாது, உண்டு வளர்ந்திருந்தவளுக்கு… வேலைக்கிடைத்த பிறகான இந்த ஒரு வருட காலமும் நல்ல சாப்பாடு தான்… காசெல்லாம் எதுவும் கட்ட தேவையில்லை…
வேளா வேளைக்கு, சூடாக உணவு சமைக்கப்பட்டு, மருத்துவமனை ஊழியர்களுக்காக அடுக்கப்படும்…
இரண்டு ஷிஃப்ட் பார்க்கிறவள்… மூன்று வேளைக்கும் அங்கேயே திருப்தியாக உண்டுவிடுவாள்…
பசி கொஞ்சம் மட்டுப்பட, அவளுக்கு மீண்டும் சாந்தினி குறித்த பயம் உள்ளத்தை சூழ்ந்துக்கொண்டது… உடன் ஈத்தன் தன் பாட்டியை பிரிந்ததும் அழுததும், வேறு நினைவிற்கு வர… தொண்டையை அடைத்த உணர்வு…
தன் ஒருவருட கால சர்விஸில் இதுவரை அவள் யாரின் இழைப்பையுமே நேரில் பார்த்தது இல்லை… முதல் முறையாக இன்று தான்… பார்த்தாள்…
அதில் அதற்கு மேல் உணவு இறங்கவில்லை… தட்டில் இருந்ததை மட்டும் எப்படியோ விழுங்கிவிட்டு எழுந்துக்கொண்டாள்…
‘கடவுளே… சமரா சாருக்கு இதை தாங்கும் தைரியத்தை கொடுத்து, கூடவே இருங்க… அவங்க ரொம்ப நல்லவங்க…’ என்று வேண்டியவளுக்கு, இன்னுமே ஈத்தன் குறித்து எதுவும் தெரியவில்லை. பெரிய பிரபலம் போல அளவிலேயே அவன் நின்றுவிட…
உள்ளே சென்று முகம் கழுவி, தலையை திருத்தி, மருத்துவமனை உடைக்கு மாறியவள்…
அங்கிருந்த பெரிய கண்ணாடி முன்பு நின்று, அவளுக்கு அவர்கள் கொடுத்திருந்த மேக்கப் கிட்டில் இருந்ததை எடுத்து போட்டுக்கொள்ள ஆரம்பித்தாள்.
குழந்தைப்பேறுக்காகவும், குழந்தை வரம் வேண்டியும் மருத்துவமனை வருபவர்களை வரவேற்க, அழுது வடியும் முகங்களாக இல்லாது, நம்பிக்கை அளிக்கும் விதமாக புத்துணர்வு நிரம்பிய முகங்களாக இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொன்றையும் மருத்துவமனை பார்த்து பார்த்து செய்கிறது…
அதில் தான், சற்று நிறமாக பிறந்திருந்த குறிஞ்சியை தூக்கி, அலங்காரமாக, விஐபி வார்ட் நர்ஸாகவும் போட்டு இருந்தனர்…
வியாபார யுக்தி தான் அனைத்தும்…
எப்பொழுதும் போல் அவளை வேலைகள் இழுத்துக் கொள்ள… நடுயிரவு வீட்டினை சென்று அடைந்தவளை வரவேற்றது… டீவியில் ஓடும் சோகமான பாடல்கள் தான்…
என்ன இது என்று அதன் இசையை வைத்தே கண்டுப்பிடித்திருந்தவள்… அதனை திரும்பிக்கூட பார்க்கவில்லை…
லோகேஸ்வரியும் இன்று முன்பே உறங்கிவிட்டிருக்க… நிம்மதியானவள்…
சாந்தினியின் வேலைகளை பார்க்க ஓடிவிட்டாள்…
முகம் முழுவதும் வலியின் சாயலுடன் கிடந்த, சாந்தினியை பார்க்க பார்க்க, இன்றைய ஏமாற்றம் அவளை முகத்தில் அறைந்தது…
அவர் முன்பு அழ முடியாமல் பல்லைக்கடித்துக்கொண்டு, அனைத்தையும் செய்து, இறுதியாக சாந்தினிக்கு இரவு தூங்குவதற்கான ஊசியை போட்டுவிட்டு…
கலங்கிய கண்களுடன் வெளிவந்தவள்…
அறையில் இருந்த துவைக்க வேண்டிய துணிகளை அள்ளிக்கொண்டு… அப்படியே வாசலில் ஷூவுடன் கிடந்த பூஜாவின் சாக்ஸை சென்று எடுத்துவர…
“அழாத செல்லம்… அவர் இதிலிருந்து நிச்சயம் மீண்டு வந்துடுவார்… நாம என்ன செய்ய முடியும்” என்ற பிரபுவின் குரல் காதில் விழுந்தது.
அதில் என்னவோ ஏதோ என்று பதறிய குறிஞ்சி அவர்களை திரும்பி பார்க்க…
பிரபு தோளில் சாய்ந்திருந்த ஐஸ்வர்யா, “என்னால தாங்கவே முடியலை மாமூ” என்று தேம்பியப்படியே இருக்க…
அவர்கள் இருவரும் பார்க்கும் தொலைக்காட்சி பெட்டியில் அப்பொழுது தான் குறிஞ்சி தன் கவனத்தை வைத்தாள்…
அதில் உமையாளின் உடல் ஐஸ்பெட்டியில் இருக்க… முதல்வர் சென்று மரியாதை செலுத்திய காணொளியை செய்தியில் காட்டிக் கொண்டிருந்தனர்… உடன் ஈத்தன் காலையில் அவள் பார்த்திருந்த அதே உடையில் தான் அவர் அருகேயே நின்று இருந்தான்… அவனை முதல்வர் கட்டியணைத்து ஏதோ பேசிவிட்டு செல்ல… அடுத்தடுத்து பல அமைச்சர்களும் அங்கு வந்துச்சென்ற காணொளிகள் வரிசைக்கட்டியது…
அதை பார்த்து ஏன் ஐஸ்வர்யா அழுகிறாள் என்று அவள் நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே…
“குறிஞ்சி இங்க வா” என்றான் பிரபு.
உடனே அவள் அவர்கள் அருகே செல்ல, “ஐஸுக்கு ரொம்ப தலைவலியா இருக்கு… இந்த தைலத்தை தேயிச்சு பிடிச்சு விடு” என்றான்…
அதில் கையில் இருந்த துணிகளை கீழே வைத்துவிட்டு வந்தவள்… சோஃபாவிற்கு பின்புறம் நின்று ஐஸ்வர்யாவிற்கு தலையை பிடித்துவிட…
பிரபு சேனலை மாற்றினான்…
அச்சேனலில் ஒரு பெண், “நம்மளோட ஸ்வீட் டார்லிங் ‘ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபர்’ ஒரு பாடகர் என்பதை தாண்டி, அவரை பற்றிய மற்ற விபரங்கள் யாருக்கெல்லாம் தெரியும்… தெரியாதவங்க இருந்தா தெரிஞ்சுக்கலாம் வாங்க…” என்று அந்த நடுயிரவில் அழைக்க…
குறிஞ்சியின் கவனம் மொத்தமும் அதில் தான்…
🦋அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🦋
கருத்துகள்
கருத்துரையிடுக