17.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
அத்தியாயம் -17
குறிஞ்சி மலர், குமாருக்கும் சாந்தினிக்கும் திருமணமாகி, பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு தேவையில்லாது பிறந்தவள்.
ஆம்! தேவையான நேரத்தில் பிறக்காது… இலக்கணம் மாற்றப்பட்டு… தேவைகள் தீர்ந்து… அனைத்தும் அடங்கிய பிறகு மலர்ந்தவள்…
திருமணமான அடுத்த மாதத்தில் இருந்து, “ஏதாவது விஷேசம் உண்டா?” என்று தொடங்கி, “இன்னுமா ஒன்னும் இல்லை…” என்று மாறுபட்டு, இறுதியில், “அவ்ளோ தான் போல…” என்று திருமணமான ஒரே வருடத்தில் குமார் வீட்டிலிருந்து சாந்தினியியை திருப்பி அனுப்பிவிட…
சாந்தினியின் அண்ணன், யார் அவரை காலம் முழுக்க வீட்டில் வைத்து சோறு போடுவது என்று பதறி, மீண்டும் அங்கேயே இழுத்துவந்து தள்ள பார்க்க…
உட்கார சொந்த வீடுக்கூட இல்லாத நிலையில், குமாரின் பெற்றோர் தங்களின் வீட்டிற்கு வாரிசு வேண்டும் என்று உறுதியாக மறுத்துவிட… குமாரும், புது மாப்பிள்ளையாகும் குஷியில் சாந்தினியை கைக்கழுவி விட்டார்…
ஏற்கனவே செலவு செய்து, கழித்துவிட்ட சாந்தினியை, அவரின் அண்ணனுக்கும் அண்ணிக்கும், மீண்டும் வீட்டில் திரும்ப வைத்துக்கொள்ள, சுத்தமாக விருப்பம் இல்லை. பெற்றோரையும் ஏற்றிவிட்டு மீண்டும் மீண்டும் குமாரின் வீட்டினரிடம் பஞ்சாயித்து வைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்…
அதன் முடிவாக சாந்தினியின் ஒரே தங்கை லோகேஸ்வரியை, சாந்தினிக்கு போட்ட அதே நகையை வாங்கி போட்டு, குமாருக்கு இரண்டாவதாக திருமணம் முடித்து, உடன் உதவிக்கு வைத்துக்கொள்ளுமாறு சாந்தினியையும் அனுப்பிவிட்டு பிரச்சனையை முடித்துக்கொண்டனர்.
சாந்தினிக்கு அப்பொழுது வயது வெறும் பத்தொன்பது தான். அந்த வயதிலேயே மலடி பட்டத்துடன், ஏதோ பெரிதாக பாவம் செய்தவராக பார்ப்பவர்கள் எல்லாம் அதனை குத்திக்கட்டி பேசி, மூலையில் உட்கார வைத்துவிட்டனர்…
நன்றாக கொழுக்கு மொழுக்கு என்று இருந்த மைனர் மச்சினிச்சியே, தனக்கு இரண்டாவது மனைவியாக வந்துவிட்டதில் குமாருக்கு ஏகோபோக சந்தோஷம்.
லோகேஸ்வரிக்கு வயதும், பக்குவமும் சுத்தமாக இல்லாத காலம். இரண்டாவது மனைவியாக ஆனதில் சுத்தமாக விருப்பம் இல்லாமல் இருந்தவர், குமாரின் அணுகுமுறையில் சிறிது சிறிதாக மாறி, ‘என் புருஷன், என் குடும்பம்’ என்று கர்வமாக வாழத்தொடங்கிவிட்டார்.
அதிலும் அடுத்த மாதமே அவர் கருவுற்றுவிட… அவர்களை கையில் பிடிக்க ஆளே இல்லை…
வீட்டு வேலை ஒன்றைக்கூட அவர்கள் யாரும் செய்ய மாட்டார்கள்… சாந்தினி தான் அனைத்தையும் செய்ய வேண்டும்…
அன்றைய காலக்கட்டத்தில் படிப்பும் கிடையாது, வெளியுலக அனுபவமும் கிடையாது, கையில் பணம் என்பது சுத்தமாகவே கிடையாது… ஏன், சாந்தினிக்கு தனியாக கடைக்கு சென்று, நாலுப்பொருள் கூட சரியாக பணம் கணக்கு பார்த்து வாங்க தெரியாது… பலன் கிணத்து தவளையாக அந்த வீட்டினுள்ளே கிடந்தார்…
வெளியிலும் எங்காவது அத்திப்பூத்தாற் போல் சொந்தப்பந்தங்கள் மத்தியிலோ, அக்கம் பக்கமோ, தலைக்காட்டினால் போதும், அவ்வளவு தான். “ஐயோ இவளா” என்றும், “ச்சீ ச்சீ” என்றும் ஒதுக்கிவிடுவார்கள்.
ஏன், அவர் மூன்று வேளைக்கும் தூக்கி வைத்து, சோறு ஊட்டிவிடும் ஐஸ்வர்யா கூட அவரை அந்த வீட்டில் ஒருநாளும் மதித்தது இல்லை…
அந்தளவிற்கு அவர் என்றால் அனைவருக்கும் அலட்சியம்…
நாளடைவில் அவரே, தான் பெரிதாக ஏதோ பாவம் செய்துவிட்டதாக பயந்து முடங்கிக்கொண்டார்… அப்படி தான் அவரின் வாழ்க்கையும் சென்றது…
பத்து வருடங்களுக்கு மேல் அந்த வீட்டை கூட்டும் துடைப்பமாக மட்டும் கிடந்தவரின் வாழ்க்கை, ஒரே இரவில் அதைவிட மோசமாகிப்போனது…
அனைத்து வேலையையும் முடித்துவிட்டு, சமையல் அறையில் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டு இருந்தவரை, நெருங்கிய குமார், சாந்தினி பதறி எவ்வளவு மறுத்தும், எதிர்த்தும், கதறியும் விடவில்லை… எளிதில் அவரை அடக்கி தன் இச்சையை தீர்த்துக் கொண்டார்…
ஒரு பெண்ணாக, அன்று அவ்வீட்டில் அவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை கேட்க ஒரு நாதிக்கூட இல்லாது தவித்து கிடந்தார்…
அதிலும் வலியிலும், பயத்திலும் அழுதுக் கதறியவரிடம், ‘வெளியில் சொன்னால் நீ தான் அழைத்தாய் என்பேன்’ என்ற மிரட்டலுடன் குமார் சென்றுவிட, சாந்தினிக்கு புது சோதனை வந்துவிட்டது…
ஆனால், அதற்கு பிறகான நாட்களில், இரவு வேளைகளில் அவர் எங்கு உறங்குகிறார் என்பதை, என்ன முயன்றும் குமாரால் கண்டுப்பிடிக்க முடியாது போனது…
தோட்டத்தில் மாடிக்கு செல்லும் படிக்கட்டிற்கு அடியில், மறைவாக ஒரு இடத்தை தனக்கென்று கண்டுப்பிடித்துக்கொண்ட சாந்தினி, பூச்சு பொட்டுகளுடனே தன் இரவுகளை பல மாதங்களுக்கு மேலாக கழிக்க…
இருவரின் விஷயம் ஒரு நாள் ஊருக்கே அம்பலம் ஆனாது…
தெருவில் கார்ப்பரேஷன் நீரை குடத்தில் பிடித்து தூக்கிக்கொண்டு வந்துக்கொண்டு இருந்தவர்… திடீரென்று தலைச்சுற்றி விழுந்துவிட… கல்லில் அடித்து தலையில் நல்ல அடி…
அங்கிருந்தவர்கள் ஏதோ அதிசயமாக அவரை தூக்கிக்கொண்டு அந்த தெருவிலேயே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுவிட…
மயக்கம் தெளிந்து எழுந்தவர்… குடம் குடமாக எடுத்த வாந்தியில்… சந்தேகமாக பரிசோதிக்கப்பட… அவரின் கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டது… அதுவும் கலைக்கும் கட்டத்தை எல்லாம் அது எப்பொழுதோ தாண்டிவிட்டு இருந்தது…
பிறகென்ன…
சாந்தினிக்கு வாழ்க்கை நரகம் நரகம் தான்…
லோகேஸ்வரியிடம் சாந்தினி வாங்காத பேச்சுக்களே கிடையாது… “தன் கணவனை அபகரிக்க பார்க்கின்றாள்” என்று சரமாரியாக அடிகள் மிதிகள் கூட விழும்…
அவர் எவ்வளவு கூறியும் யாரும் காதுக்கொடுத்து கேட்பது கூட இல்லை…
அக்கம் பக்கம் எல்லாம் அவரின் காதுப்படவே அவரை அவ்வளவு அசிங்கமாக பேசுவார்கள்…
ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என்பது தான் அங்கு முடிவு….
பெற்றவர்களும் மறைந்துவிட்டு இருந்தனர்… இருந்து இருந்தாலும் ஒரு பிரயோஜனமும் கிடையாது அது வேறு விஷயம்… அண்ணன் வீடெல்லாம் எப்பொழுதோ கைகழுவிட்டாகிவிட்டது.
இதில் குமாரின் பெற்றோர் மட்டும் ‘இதுவாச்சும் ஆம்பிளை பிள்ளையா பிறக்கட்டும்’ என்றுப்பேச… லோகேஸ்வரிக்கு சாந்தினியை கொல்லும் வெறியே வந்துவிட்டது… வர தானே செய்யும்… அவரவருக்கு அவரவர் நியாயங்கள்…
இதில் சட்டப்படி தண்டனை அனுபவிக்க வேண்டிய குமாருக்கு மட்டும் எந்த குறைவும் இல்லாது வாழ்க்கை சென்றது.
ஒருவழியாக திருமணம் முடிந்து, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சாந்தினி வெற்றிகரமாக பிள்ளை பெற்றுவிட்டு இருந்தார்…
அதுவும் அவரே, அருகில் இருந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனியாக நடந்துச்சென்று…
மாலை பக்கம் வந்த மாமியார் கூட, பொம்பிளை பிள்ளை என்றதும், எட்டிக்கூட பார்க்காது அப்படியே கிளம்பிவிட்டார்…
அங்கு சாந்தினிக்கு அருகில் அவருடன் பிள்ளைப் பெற்றிருந்த பெண் தான், அவருடைய குழந்தைக்கு பரிசாக வந்த உடைகளில் சிலதை குழந்தைக்கு கொடுத்தும், மருத்துவமனை உணவு பத்தாது என்று வீட்டு சாப்பாட்டை சாந்தினிக்கு கொடுத்தும் உதவியது.
சாந்தினியின் நிலையை அறிந்து மருத்துவரும், மூன்று நாட்கள் கடந்தும் அவர் அங்கேயே இருந்ததில் ஒன்றும் கூறவில்லை…
சாந்தினிக்கு ஒரே ஆறுதல், பெரிதாக அவருக்கு உடல் சிரமம் தராது பிறந்திருந்த குழந்தை மட்டும் தான்…
இனி அவர் மலடி கிடையாது.
ஆனால்…?
வாழ்க்கையே பயமாக இருந்தது.
அதுவும் பிறந்திருந்த பொம்பளை குழந்தையை பார்க்கும் பொழுது. மிகவும் பயமாக இருந்தது.
அதில் பயந்துக்கொண்டு இருந்தாரே தவிர்த்து, எப்படி இதில் இருந்து மீளலாம் என்றெல்லாம் யோசிக்கவில்லை.
கல்வியறிவும் இல்லை. பொது அறிவும் இல்லை. தைரியமும் இல்லை. நிமிர்ந்து நிக்க முதுகெலும்பும் இல்லை.
மேலும் இரண்டு நாட்கள் கழிய, வீட்டு வேலைகளை உடல் வளைந்து செய்ய முடியாமல், மருத்துவமனைக்கு வந்த லோகேஸ்வரியும், அவரின் மாமியாரும் ‘இன்னும் என்ன இங்கேயே இருக்க… கிளம்பு’ என்று சாந்தினியை வீட்டிற்கு அழைக்க… இவரும் குழந்தையுடன் மீண்டும் அங்கேயே அடைக்கலம் ஆகிக் கொண்டார்…
அதன் பிறகு ஒருமாதம் கழித்து, அதே மருத்துவமனைக்கு தடுப்பூசி போட, சாந்தினி சென்றிருந்தார். அப்பொழுது ரெஜிஸ்டர் செய்ய மருத்துவர் கேட்ட பிறகு தான் குழந்தைக்கு பேர் வைக்காததே அவருக்கு உரைத்தது. என்ன பெயர் வைப்பது என்று கூட சாந்தினிக்கு தெரியவில்லை.
“படிச்சவங்க நீங்களே ஒரு பேரை வைங்க டாக்டர்… அப்ப தான் உங்களை மாதிரி நல்லா வருவா”, என்று சாந்தினி கேட்க…
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக மலரும் குறிஞ்சி பூ அந்த ஆண்டு மலர்ந்திருக்க, குடும்பமாக சென்று அதை பார்த்துவிட்டு வந்திருந்திருந்த அந்த மருத்துவர் தான், மிக பொருத்தமாக “குறிஞ்சி மலர்” என்று குழந்தைக்கு பெயர் வைத்தது.
அதற்கு கூட வீட்டில் விளக்குமாத்துக்கு வச்சிருக்க பேர பாரு என்று திட்டு விழும்…
🖇️அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்🦋
Ipdilam nejathula Koda nadakuthu sister.. neriya ponnunga amma kaga than Ela kastathaiyum thaangitu irukanga. Actually kurinji character unga karpanai thana. Real characters mathiri iruku
பதிலளிநீக்கு