18.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!
அத்தியாயம் -18
ஈத்தனின் வீடு இருக்கும் பகுதிக்கு மாநகர பேருந்தில் சென்று இறங்கிய குறிஞ்சி, புது ஏரியா என்பதால் வழி தெரியாது, வேறுவழியின்றி ஒரு ஆட்டோவை பிடித்து, அவன் வீட்டை எட்டு மணிக்கே அடைந்துவிட்டாள்…
‘என்னடா இது… அந்த சார் வீடுன்னு தானே சொன்னார்… ஆனா இது ஏதோ கம்பெனி மாதிரி இருக்கே…’ என்று குழப்பமாக பெரிய காம்பவுண்ட் மதில் சுவரையும், இரும்பு கேட்டினையும் பார்த்து நினைத்தவள்… விசிட்டிங் கார்ட்டில் இருந்த எண்ணை ஒருமுறை சரியா என்று சரிப்பார்த்துக்கொண்டாள்…
பிறகு அங்கு பக்கவாட்டில் சிறிதாக தெரிந்த செக்யூரிட்டி அறையின் ஜன்னல் பக்கம் சென்று, விசிட்டிங் கார்டை காட்டி விசாரிக்க…
கேட்டை திறந்து அவளை உள்ளே அனுமதித்தார்கள்…
அதில், உள்ளே நுழைந்துப்பார்த்த குறிஞ்சிக்கு கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்துக்கொண்டது…
மண்டபமா, கோவிலா, அரண்மனையா என்னவென்று அவளுக்கு சொல்ல தெரியவில்லை…
சுற்றி பச்சை பசேலென்று பெரிய தோட்டம் பூங்கா போல் இருக்க… மத்தியில் இருந்தது ஒர் வெண்ணிற மாளிகை…
தூரத்தில் இருந்து பார்க்கும் போதே அவ்வளவு பிரமாண்டமாக வேலைப்பாடுகளுடன் தெரிந்தது…
அதில், “அண்ணா இந்த விசிட்டிங் கார்ட்டில் இருக்கும் வீடா இது?” என்று அவள் மீண்டும் சந்தேகமாகி விசாரிக்க…
“ஆமாம் ம்மா” என்ற செக்யூரிட்டி, அங்கிருந்த சிறிய பேட்டரி காரில் அவளை அழைத்துச்சென்று வீட்டு வாசலில் இறக்கிவிட்டு வந்தார்.
ஏற்கனவே செக்யூரிட்டி மூலம் தகவல் அறிந்திருந்த வீட்டு ஒருங்கிணைப்பாளர் வந்து, “சார் பிரேக் ஃபாஸ்ட் டேபிள்ள இருக்கார். வெயிட் பண்ணுங்க மா. வந்துடுவார்” என்று அவளை வரவேற்று, முன்புறம் இருந்த ஒரு விசாலமான அறையில் அமர வைத்துவிட்டு செல்ல…
குறிஞ்சிக்கு இனம் புரியாத பயம் நெஞ்சம் முழுவதும் நிறைந்துவிட்டது…
நேற்று பார்த்தவன் பணக்காரன் என்று அவள் யூகித்து தான் இருந்தாள். இல்லையென்றால் அவ்வளவு பெரிய தொகையை கேட்டதும் தூக்கி கொடுக்க முடியாது இல்லையா.
ஆனால் நேரில் இதையெல்லாம் பார்க்கும் போது, ஒருமாதிரியாக ஏதோ தான் பொருந்தாத இடத்தில் இருப்பது போல் இருந்தது…
இப்படியெல்லாம் கூட ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்றுக்கூட நினைத்தாள்…
அந்த உயரக சோஃபாவில் இலகுவாக சாய்ந்து அமர கூட அவளுக்கு முடியவில்லை… நுனியிலேயே திக் திக் என்று அமர்ந்து இருந்தாள்…
அதற்குள் அங்கு வந்த பணியாள், அவளுக்கு குடிக்க என்ன வேண்டும் என்று கேட்டு, அழகான பித்தளை டவரா செட்டில் காஃபியை எடுத்து வந்து தர…
அங்கிருக்கும் அனைவருமே, எவ்வித பாரப்பட்சமும் இல்லாது, மரியாதையுடன் பழகுவதில் வியந்தப்படியே, நன்றிக்கூறி வாங்கிக்கொண்டவள்..
அதிலிருந்து முதல் மிடறு குடிக்க, கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்துக்கொண்டது… இதுதான் காஃபியா… அப்படி என்றால் தினமும் நாம் அருந்தியது என்ன என்ற வகையில் அதன் சுவை அபரிமிதமாக இருக்க…
பசியில் கடைசி சொட்டு வரை குடித்து முடித்துவிட்டாள்…
அதில் அவளின் பதட்டமும் சற்று மட்டுப்பட்டு இருந்தது…
அதேநேரம் உள்ளே உமையாளுடன், உணவு மேஜையில் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்த ஈத்தனிடம் உமையாள்…
“ரொம்ப நாள் பிறகு… இன்னைக்கு தான் சமரா நான் நிம்மதியா இருக்கேன்…” என்றவர், காலை பூஜைக்கு என்று செய்திருந்த சர்க்கரை பொங்கலை எடுத்து சுவைத்து உண்ண…
அவரை கனிவுடன் பார்த்திருந்த ஈத்தனின் விழிகளுக்குள்… வெளியில் தெரியாத தவிப்பு ஒன்று ஒளிந்துக்கொண்டு இருந்தது…
நேற்று மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்தவனை உமையாள் அவ்வளவு ஆவலாக பார்க்க… அதைக் கெடுக்க அவனால் முடியவே இல்லை… ஏற்கனவே அவரின் சோர்ந்த முகத்தை காண முடியாமல் தானே அன்றைய அடியினை அவன் எடுத்து வைத்ததே…
அதில், இதற்கு வேறு தீர்வு கிடைக்கும் வரை… அப்படியே மெயின்டெயின் பண்ணுவோம் என்று முடிவு செய்தவன்…
தன் தலைமுடியை இடதுக்கையால் கோதியப்படியே அவரை பார்த்து சிரிக்க…
அவ்வளவு தான் உமையாள் அம்மா, பேரன் சென்ற காரியம் கைக்கூடியதாக நம்பிவிட்டார்…
‘திருமணமே வேண்டாம்’ என்று தலையில் இடியை இறக்கியவனின் இந்த மாற்றம், அவரின் வயிற்றில் பால் வார்த்துவிட…
அப்பொழுதில் இருந்தே சிறு குழந்தை போல், புன்னகையுடனே வீட்டில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்…
பாவம் பேரனின் உடம்பில் பெரும் நடிகர் ஹன்டரின் ரத்தம் ஓடுவதை அவர் அந்நேரம் மறந்தேப்போனார்…
“ஒருநாள் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது சமரா… கொஞ்சம் சாப்பிடுயா…” என்று அவன் தட்டிலும் அவர் சர்க்கரை பொங்கலை சிறிது வைக்க…
“ஆ… நோ ஸ்வீட்ஸ் பாட்டி… எனக்கு பிராக்டீஸ் இருக்கு… குரல் போயிடும்” என்றவன் அவர் கையை பிடித்து தடுக்க…
“இருக்கட்டும் சமரா… எப்ப தான் உனக்கு வேலையில்லாமல் இருந்து இருக்கு… நல்லா சாப்பிட்டு அனுபவிக்கும் வயசில், இப்படி ஸ்வீட் வேண்டாம்… காரம் வேண்டாம்… புளிப்பு வேண்டாம்னு… பத்திய சாப்பாட்டு காரனாட்டும்… இன்னும் நம்ம ஊரு சாப்பாடு உனக்கு பழகலை.. ஒழுங்கா சாப்பிடுயா…” என்றவர் அவன் தட்டில், சிறிது இனிப்பை வைத்துவிட…
ஸ்பூனில் அதை எடுத்து சுவைத்தவனுக்கு, உடல் மொத்தமும் தித்திப்பு பரவியது போல் இருந்தது… அவனால் அதை தாங்கவே முடியவில்லை… அதில் தன் கண்களை “காட்…” என்று மூடி திறந்தவன்… உமையாளை புன்னகையுடன் பார்க்க…
அவரும் அவனை தான் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.
உள்ளுக்குள், ‘கொடுத்திருந்த வரன்களில் பேரன் யாரை தேர்ந்தெடுத்தான்… யாரிடம் சென்று நேற்று பேசினான்… யார் என் பேத்தியாக வர போவது…’ என்று நொடிக்கு நொடி அவருக்கு ஆவல் அதிகரித்துக்கொண்டே செல்ல…
அதை அடக்க முடியாமல் வாய்விட்டே அவனிடம் கேட்டுவிட்டார்…
“இந்த வாரம் யூ.எஸ் டிரிப் போயிட்டு வந்ததும் சொல்றேன் பாட்டி…” என்ற ஈத்தன் உணவை எடுப்பதுப்போல் குனிந்துக்கொள்ள…
அவன் வெட்கப்படுகிறான் என்று நினைத்த உமையாளுக்கோ… மேலும் மேலும் மகிழ்ச்சி கூடிக்கொண்டே போனது…
அதில், “உன்கிட்ட ஒன்னு காட்டனும் சமரா” என்று, அவனை தன் அறைக்கு அழைத்துச்சென்ற உமையாள்…
அவரின் பெரிய இரும்பு லாக்கரை திறந்து…
அதிலிருந்த ஒருப்பெட்டியை எடுத்தவர், அவன் கையில் வைத்து அதை திறக்க…
உள்ளே முருகனின் வேல் வடிவம் பொரிக்கப்பட்ட மாங்கல்யமும், அதற்கு இரண்டு பக்கமும் கோர்க்க இருந்த மயில் வடிவ குண்டுகளும், கண்களை கூச செய்யும் அளவில் இருந்தன…
இரண்டு பவுன்களுக்கு குறையாத அந்த தங்க வேலில் இருந்த, மூன்று வரி திருநீர் பட்டை அச்சிலும், மயில்களின் ஓரங்களிலும், பதியப்பட்டிருந்த உயர்ரக வெள்ளை வைரங்களின் ஜொலிப்பு தான் அதற்கு முக்கிய காரணம்…
“லுக்ஸ் வெரி எலிகெண்ட் பாட்டி” என்ற ஈத்தனின் கரங்கள், அதிலிருந்து முதலில் எடுத்துப்பார்த்தது… மயிலினை தான்…
ஏனென்றால் நீலம், மரகதம், மாணிக்கம், வைரம் என்று அனைத்து நிற கற்களும், அவ்வளவு நேர்த்தியாக பதிக்கப்பட்டு நிஜ மயிலினை ஒத்து அது செய்யப்பட்டு இருந்தது… அதிக உழைப்பும், திறமையும் நிச்சயம் அதற்கு பின்னால் இருக்கும் என்று நினைத்தான்…
“உங்க தாத்தா தான் சமரா, கூடவே உட்கார்ந்து பார்த்து பார்த்து செய்து வாங்கினார்…”, என்ற உமையாளுக்கு நினைவுகள் இருபத்தி இரண்டு வருடங்களுக்கு பின்பு ஓடிவிட்டது… தீவிர முருகன் பக்தன் மயில்வாகனம்… ஒருநாளைக்கு குறைந்தது 100 முறையாவது முருகனை அவர் அழைக்காமல் இருந்தது இல்லை…
வேலிருக்க வினையுமில்லை, மயிலிருக்கப் பயமுமில்லை… என்பதில் அவருக்கு நிறைய நம்பிக்கை…
நினைவுகளின் தாக்கத்தில் குரல் கரகரக்க “மாங்கல்யத்தை தொட்டு வணங்குயா” என்ற உமையாளின் பேச்சினை மறுக்காது, ஈத்தன் தொட்டு வணங்க…
“உன் அம்மாக்காக தான்… உன் தாத்தா இதை செய்தார் சமரா… தங்க கட்டியை எடுத்துட்டு போய் நம்ம குல தெய்வமான பூம்பாறை முருகன் பாதத்தில் வச்சு, பூஜை செய்து எடுத்துட்டு வந்து தான் உருக்கவே கொடுத்தார்… ஆனா உன் அம்மா கடைசி நேரத்தில் இவ்வளவு பெருசு வேண்டவே வேண்டாம்னு சொல்லி, வேற அவசர அவசரமா செய்து வாங்கினோம்…”, என்றவர், “கடைசி வரை தாத்தாக்கு இது மனசை உருத்திட்டே இருந்ததுயா… இதை கட்டி இருந்தா உன் அம்மாக்கு…”, என்றவர், சட்டென்று எதிரில் இருப்பவனை அப்பேச்சு காயப்படுத்திவிடுமே… என்று தன் பேச்சினை நிறுத்திக்கொண்டார்…
ஈத்தனுக்கோ அவர் சொல்ல வந்தது சொல்லாமலே புரிந்து இருந்தது…
உமையாளிற்காக முகம் மாறாது நின்று இருந்தான்…
அவன் கன்னம் பற்றி தன் புறம் திருப்பிய உமையாள்… “எனக்காக ஒன்னு செய்யறியா ஐயா” என்று கெஞ்சலாக கேட்க…
“கண்டிப்பா பாட்டி… இது என்ன பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு” என்றவனிடமே அப்பெட்டியை கொடுத்துவிட்ட உமையாள்… “நாளைக்கு என் பேத்திக்கு நீ இதை தான்யா கட்டனும்…” என்றுவிட்டு திரும்பியவர்…
அதனை கோர்க்க என்று செய்திருந்த 15 சவரன் தங்க சரடையும், லாக்கரில் இருந்து எடுத்து அவன் கையில் ஒப்படைத்து விட்டார்…
அதில் அதிர்ந்த ஈத்தன்… “இப்பவே எதுக்கு பாட்டி இதையெல்லாம் என்கிட்ட தரீங்க… உங்கக்கிட்டயே இருக்கட்டும்…” என்று அவன் திருப்பி தர…
“கொடுத்ததை வேண்டாம் சொல்லாம வச்சிக்கோ சமரா… அதுவும் இன்னைக்கு செவ்வாய் கிழமை… அந்த சமரவேலனோட நாள்… உனக்கானதை எப்ப கொடுத்தா என்ன” என்றவர்… தொடர்ந்து…
“இன்னைக்கு ஏதோ உங்க தாத்தா ஞாபகம் நிறைய வருது சமரா…” என்றவர்…
நினைவுகளின் தாக்கத்தை தாங்க முடியாது, “நான் கொஞ்சம் படுத்து எழுந்திருக்கிறேன்…” என்றப்படியே நடக்க…
அவரின் கையை பிடித்துக்கொண்டு அவருடனே நடந்த ஈத்தன், “உடம்புக்கு எதுவும் முடியலையா பாட்டி… ஸ்வீட் சாப்பிட்டதா இருக்குமோ…” என்றவன் நர்ஸினை அழைத்து பார்க்க சொல்ல…
“அதெல்லாம் ஒன்னும் இல்லை யா… ஒரு ஸ்பூன்ல என்ன ஆகிட போகுது…” என்றவர், “நேத்தில் இருந்தே எனக்கு உடம்பே லேசான மாதிரி இருக்கு சமரா… அதான் கொஞ்சம் படுக்க போறேன்… அடுத்த வாரம் வேற நீ வந்த பிறகு கல்யாண வேலை எல்லாம் எனக்கு தலைக்கு மேல இருக்கே… இப்பவே ரெஸ்ட் எடுத்தா தான் உண்டு” என்று… ஈத்தனின் இதய துடிப்பை அவர் அதிகரிக்க…
அதற்குள் அவரை பரிசோதித்த செவிலியர், “எல்லாம் நார்மல் தான் சார். நோ பிராப்ளம்” என்றார்.
அதில், “ஓகே கூல்…” என்ற ஈத்தன்…
“நீங்க ரெஸ்ட் எடுங்க பாட்டி… ஈவ்னிங் பார்க்கலாம்” என்றுவிட்டு வெளிவந்தவன்… நேராக தன் அறைக்கு சென்று… உமையாள் கொடுத்த பெட்டியை பத்திர படுத்திவிட்டு…
உடைமாற்றும் அறைக்குள் சென்றவன்… அடுத்த பத்து நிமிடத்தில் ஃபார்மல் உடைக்கு மாறி… ஸ்டூடியோ செல்ல கிளம்பி கீழ் வர…
அங்கு அவனுடன் பயணிக்க மேனேஜர் ரவி காத்து இருந்தார்…
🦋அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக