17.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
இப்படியாக அந்த வீட்டில் வளர்ந்து வந்த குறிஞ்சி, அவ்வீட்டில் தன்னிலை அறியாது, சாந்தினியை ‘அம்மா…’ என்றும், குமாரை ‘அப்பா…’ என்றும், அழைத்து சுற்றிவர…
அவ்வீட்டில் பிரச்சனை பெரிதாக வெடித்தது…
ஐஸ்வர்யாவின் பக்கம் இருந்து…
கைக்கு கிடைத்தது அனைத்தையும் தூக்கிப்போட்டு உடைத்தவள்…
“நான் இனி ஸ்கூலுக்கு போகவே மாட்டேன். எல்லாரும் உங்க அப்பாக்கு இரண்டு பொண்டாட்டியா? நீ இரண்டாவது பொண்டாட்டி பொண்ணான்னு கேட்டு கிண்டல் பண்றாங்க… தெருவில் பசங்க கூட என்னை கிண்டல் பண்ணுதுங்க…” என்று ஓவென்று கத்தி கதறி அழுதவள்… “இனி நான் உயிரோடவே இருக்க மாட்டேன்…” என்று கத்தியை வேறு எடுத்து கீறிக்கொண்டாள்…
அவளும் குழந்தை தானே…
பெரியவர்கள் செய்துவைக்கும் பாவங்களுக்கான பலனை குழந்தைகளால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்…
ஐஸ்வர்யாவிற்கும் குறிஞ்சிக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம்…
அவளால் குறிஞ்சியையும், அவர்களின் உறவையும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…
தன் தந்தை, தனக்கு மட்டும் தான் தந்தை, என்றாள்.
ஏற்கனவே தன் வாழ்க்கையை தன் அக்கா அழித்துவிட்டால் என்ற பயத்தில் இருந்த லோகேஸ்வரிக்கு, மகளின் பிரச்சனையும் உடன் சேர்ந்துக்கொள்ள, குமாரை ஒருவழி செய்துவிட்டார்…
அதைத்தொடர்ந்து சாந்தினிக்கு சட்டப்படி டைவெர்ஸ் கொடுக்கப்பட்டு… லோகேஸ்வரி மட்டுமே மனைவி என்றானது…
மேலும் பழைய இடத்தில் இருந்து மொத்தமாக இடம் மாறி இப்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்கள்.
அனைவரிடமும் லோகேஸ்வரியின் அக்கா மட்டுமே சாந்தினி என்றும், அவரின் கணவர் அவரை விட்டு பிரிந்துச்சென்றுவிட்டதாகவும், குழந்தையுடன் தனித்து நின்றவருக்கு, தாங்கள் ஆதரவு தருவதாகவும் பதிவு செய்துவிட்டனர்…
அவ்வீட்டினுள் நடக்கும் எதுவுமே யாருக்கும் தெரியாது.
சாந்தினிக்குமே இடமாற்றம் பரவாயில்லை என்று இருந்தது. அங்கு அக்கம் பக்கத்தில் வாங்கிக்கொண்டிருந்த தேவையற்ற பழிகள் இங்கு கிடையாது. லோகேஸ்வரியின் திட்டுகள் மட்டுமே. நடந்த குளறுபடியில் குமாரும் அவரின் பக்கம் தலை வைப்பது கிடையாது…
வீட்டிற்கு அருகில் இருக்கும் புது கான்வென்ட்டில் ஐஸ்வர்யா படிக்க…
மூன்று கிலோமீட்டர் தள்ளியிருந்த அரசு பள்ளியில் குறிஞ்சியை சேர்த்து இருந்தார்கள்…
வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் சாந்தினி… மகளை ஒருநாள் கூட விடுமுறை எடுக்க விடாது… இடுப்பிலேயே அவ்வளவு தொலைவும் தூக்கிச் சென்று பள்ளியில் விட்டு அழைத்து வருவார்…
தன்னைப்போல் படிக்காமல் தன் மகள் இருந்துவிட கூடாது என்று ஏதோ ஒரு ஞானோதயம்…
“படி குட்டி… படி குட்டி” என்று அவர் கூறிக்கொண்டே இருக்க… அவளும் சமத்தாக சாந்தினி செல்லும் இடமெல்லாம் அவருடனே சென்று, உடன் அமர்ந்து படிப்பாள்… வீட்டு பிரச்சனையெல்லாம் எதுவும் புரியும் வயது கிடையாது…
“அக்கா… அக்கா…” என்று ஐஸ்வர்யா பின்பு சுற்றி அவள் கொடுக்கும் அடிகளை வாங்கிக்கொண்டு வந்து அழுவாள்… பிறகு மீண்டும் அவள் பின்பே சுற்ற ஓடுவாள்…
தப்பி தவறி அவர்களுடைய அறைக்குள் அவள் காலடி எடுத்து வைத்துவிட்டால் போதும், பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ளும் லோகேஸ்வரி, சாந்தினியை அவ்வளவு திட்டு திட்டுவார்… “பொண்ணை நைசா உள்ளே விட்டு… நீயும் வந்து உள்ளே படுத்துக்கலாம்னு பார்க்கிறியா…” என்று.
நாளடைவில் தன் அன்னையை அவர்கள் திட்டுவதை எப்படியோ உணர்ந்துக்கொண்ட குறிஞ்சி, படிப்படியாக தன் விளையாட்டு தனங்களை கைவிட்டு, அம்மாவுடனே இருந்துக்கொள்ள கற்றுக்கொண்டாள்…
அதிலும் லோகேஸ்வரி ஒருமுறை அவளை இழுத்து வைத்து, வாயில் அடித்த அடியில், குமாரை தப்பி தவறிக் கூட அவள் அப்பா என்று அதற்குப்பிறகு அழைத்ததில்லை. ஏன் அவரிடம் சென்று பேசுவது கூட இல்லை.
அவ்வளவு பயம்.
வீட்டில் சாந்தினியிடம் மட்டுமே மிக மெதுவாக, அதுவும் தேவையென்றால் மட்டுமே பேசுவாள்.
வயது கூட கூட… அவ்வீட்டில் தாயின் நிலையும்… அவளின் நிலையும் அவளுக்கு தெளிவாகவே உரைத்துவிட… மேலும் அமைதியாகி, இருக்கும் இடம் கூட தெரியாமல் இருந்துக்கொள்ள தொடங்கிவிட்டாள்…
அனுபவங்கள் பக்குவப்படுத்தி விட்டுக்கொண்டே இருந்தன…
நாட்கள் அதுப்பாட்டுக்கும் செல்ல…
இருக்கும் பணத்தை எல்லாம் டொனேஷனாக கொட்டி, மேலும் கடன் வாங்கி ஐஸ்வர்யாவை பெரிய பொறியியல் கல்லூரியில் லோகேஸ்வரியின் குடைச்சல் தாங்காது குமார் சேர்த்துவிட்டு இருக்க… அவள் கல்லூரியில் இறுதி வருடத்தில் இருந்த சமயம்… குமார் மொத்தமாக சிவலோகம் சென்றுவிட்டார்…
குறிஞ்சி அப்பொழுது தான் பெரிய பெண்ணாகி சில மாதங்களே ஆகி இருந்தது.
ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் ஹார்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருந்தவர், மெஷினை கவன குறைவாக கையாண்டு இறந்துவிட்டார்.
அதில் கம்பெனி, சில லட்சங்களை லோகேஸ்வரியின் கையில் ஆறுதலாக கொடுத்து, மாதம் சில ஆயிரம் பென்ஷன் போல் தருவதாக கூறி அனுப்பிவிட்டது…
அவர்கள் கொடுத்த பணத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல், எப்பொழுதும் போல் லோகேஸ்வரி அவருக்கும், மகளுக்கும் என்று அப்பணத்தை செலவு செய்து கரைத்துவிட…
மாதம் தரும் சில ஆயிரங்கள் எங்கிருந்து இவர்களுக்கு பத்தும்…
சாந்தினியின் சாப்பாட்டிலும்… குறிஞ்சியின் சாப்பாட்டிலும் தான் கை வைத்தனர்…
இன்னும் ஒருசில மாதங்களில் ஐஸ்வர்யா பெரிய வேலைக்கு சென்றுவிடுவாள் என்று லோகேஸ்வரி கனவில் இருக்க…
அவளோ உடன் படிக்கும் பிரபுவுடன், மாலையும் கழுத்துமாக வந்து சேர்ந்தாள்.
அதுவும் முதல் செமஸ்டர் தொடங்கி அவ்வளவு அரியர்ஸ் அவள் வைத்து இருந்ததே, லோகேஸ்வரிக்கு அவள் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் தெரியவே வந்தது.
பிரபு தன் வீட்டில் இன்னும் சேர்த்துக்கொள்ளவில்லை… இதோ அதோ… என்று பத்து வருடங்களாகவே வீட்டோடு மாப்பிள்ளையாக தான் இருக்கின்றான்…
அவனும் படிப்பை முடிக்கவில்லை…
பிஸ்னஸ் செய்கிறேன் அதுயிது என்பான்…
என்ன செய்கிறான் என்று யாருக்கும் தெரியாது…
ஐஸ்வர்யாவிற்கு மட்டும் நல்லதாக தினமும் எதாவது வாங்கி கொடுத்து மயக்கிவிடுவான்…
லோகேஸ்வரியும் வீட்டிற்கு ஒரு ஆம்பிளை, துணையாகவும், பெண்ணை கண்ணுக்குள் வைத்து தாங்குபவனாகவும் இருக்கின்றனே, என்று அவனை வீட்டில் வைத்துக்கொண்டார். மகளை இறுதிவரை கண்டித்தது இல்லை.
யாராவது எப்படியாவது போகட்டும் என்று, சாந்தினி மட்டும், தன் மகளை படி படி என்று அதிலேயே அவளை குறியாக செலுத்திக்கொண்டு இருந்தார். அதில், அவர்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த குறிஞ்சிக்கு, சிறிதளவு தொகை மட்டும் கட்டும் அளவிற்கு வசதி இருந்து இருந்தால், இந்நேரம் அவள் டாக்டருக்கு படித்து இருக்கலாம்…
விதி அவளுக்கு அந்த பாக்கியத்தை தரவில்லை…
வீட்டிற்கு அருகிலேயே இருந்த கிருஸ்தவ நர்ஸிங் ட்ரெயினிங் கல்லூரியில், அவளின் மதிப்பெண்ணை வைத்து, இலவசமாக சேர்ந்துக்கொண்டாள்…
எப்படியாவது நர்ஸிங் படித்து முடித்து, ஒரு வேலையில் அமர்ந்து, தன் அம்மாவை அந்த நரகத்தில் இருந்து வெளியே அழைத்துவந்து, நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவள் காணாத கனவு கிடையாது…
சாந்தினியும் தான்….
இன்னும் சில நாட்கள் தான்… சில நாட்கள் தான்… என்று அவ்வீட்டில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு இருந்தார்…
அவர்கள் எதிர்பார்த்தப்படியே குறிஞ்சிக்கு கேம்பசில் நல்ல வேலையும் கிடைத்துவிட்டது.
ஆனால் அதில் அவர்கள் இருவரும் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள்ளே, அத்தனை வருடங்கள் இல்லாது, சாந்தினி சோப்பு நீரில் வழுக்கி விழுந்து இடுப்பை உடைத்துக்கொண்டார்…
அதுவும் அவள் வேலைமுடிந்து வீடு வந்து பார்க்கும் வரையிலுமே அவர் உடைந்த இடுப்புடன் வீட்டில் கிடந்துவிட… அனைத்தும் கைமீறி விட்டது…
இடுப்பிற்கு கீழான உறுப்புகளில் மொத்தமாக அவர் தன் உணர்வினை இழந்துவிட்டார்…
அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் காட்டி, முதற்கட்ட வைத்தியத்தை முடித்துக்கொண்டு, இதோ ஒரு வருட காலமாக, அவருக்கு அரசு மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்ய கிடைக்கும் டோக்கனிற்காக காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்… வரிசையில் இவர்களுக்கு முன் பலர் இருக்க… இவர்களுக்கு இன்னுமே கிடைக்கவில்லை…
அதற்குள் படுக்கையிலேயே கிடப்பவருக்கு, படுக்கை புண், யூரின் இன்ஃபெக்ஷன், அதிகமாக எடுக்கும் மருந்துகளின் பக்க விளைவுகளால் கிட்னி பாதிப்பு, என்று மாதத்திற்கு ஒன்றாக வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கிறது…
இனி வலி நிவாரணி தூங்குவதற்கு மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கூறிவிட…
நடுமுதுகில் கரெண்ட் அடிப்பது போல் வந்து வந்து செல்லும் வலியில் சாந்தினி துடித்துக்கொண்டு இருக்கின்றார்…
இதில் மாதம் பத்தாயிரத்திற்கும் மேல் சாந்தினியின் மருந்துகளுக்கே போய்விடும்… மீதியில் ஒரு சில நூறுகளை மட்டுமே தனக்கு வைத்துக்கொண்டு, லோகேஸ்வரியிடம் குறிஞ்சி தந்துவிட வேண்டும்…
வீட்டில் அவர்கள் தங்குவதற்கும், உண்ணுவதற்கும் என்று…
சாந்தினி படுத்த படுக்கையானதுமே, லோகேஸ்வரி இவர்களை கிளம்ப கூறிவிட்டார்.
பிறகு ஐஸ்வர்யா தான் வீட்டு வேலையை எல்லாம் பார்ப்பதாக இருந்தால் இருந்துக்கொள் என்று அனுமதி கொடுத்தாள். அப்படியே பணமும் தர வேண்டும் என்று லோகேஸ்வரி சேர்த்துக்கொண்டார்…
சரியென்பதை தவிர வேறு வழி தெரியவில்லை குறிஞ்சிக்கு…
தெரியாத பேயிற்கு தெரிந்த பேயே மேல் என்று ஆகிவிட்டது…
அதிலும் அவளுக்கு சாந்தினியை வாரா வாரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவெல்லாம் ஒருவர் துணை நிச்சயம் தேவையாக இருந்தது. தனியாக எப்படி அவளால் அவரை தூக்கக்கொண்டு போக முடியும். பிரபு தான் இப்போதைக்கு அதற்கு என்று உதவுவது.
மானம் கெட்ட வாழ்க்கை தான். என்ன செய்வது.
மகளிடம் எத்தனையோ முறை, சாந்தினி, “நீ என்னைவிட்டு விட்டு எங்காவது போய் பிழைத்துக்கொள். எப்படியும் நான் பிழைக்க போவதும் இல்லை. உனக்கு உபயோகமாக இருக்க போவதும் இல்லை. இல்லை என்னை கொலை கூட செய்துவிட்டு போய்விடு… உனக்கு புண்ணியமாக போகும்” என்றுக்கூட குறிஞ்சியிடம் கெஞ்சி இருக்கிறார்.
எந்த குழந்தை தன் தாயை விட்டு செல்லும்.
அதுவும் அவர் நன்றாக இருந்த வரை, மகளுக்கு ஒரு கூரை வேண்டும் என்று, அனைத்து பேச்சுக்களையும் வாங்கிக்கொண்டு… வேலையையும் செய்துக்கொண்டு… அவர் பட்டினி கிடந்து, அவள் வயிற்றை நிறைத்து… என்று அவளை வளர்த்துவிட்டு இருந்தாரே…
விட்டுவிட முடியுமா…
பாசம் தடுத்தது…
அவள் தன்னுடைய தன்மானத்தை எல்லாம் புதைத்துவிட்டு வாய்விட்டு உதவி கேட்காத ஆளே கிடையாது… எனலாம்…
தெரிந்தவர், தெரியாதவர் என்று அனைவரிடமும் கேட்டு பார்த்துவிட்டாள்…
ஆயிரம் இரண்டாயிரம் என்றால் பரவாயில்லை…
லட்சங்கள் என்னும் போது யார் தான் என்ன செய்ய முடியும்…
‘அவ்வளவு தான் போல’ என்று அவள் துவண்டு போன நேரம் தான்… வந்துவிட்டான் அவளின் தேவன்…
🦋 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
Enna kodumai pa kurimji rumba kashtam pattuta ini avathu avaluku nimadi ah kudumga pa, eppadiyo anda naragathula irunthu vandalo
பதிலளிநீக்குKurinji nilamai ya ninacha kastama Iruku dear... Super words dear
பதிலளிநீக்குSad of kurunji😞 very nice eppidi sis
பதிலளிநீக்குபாவம் குறிஞ்சி
பதிலளிநீக்குVery very sad 😭😭
பதிலளிநீக்கு