15.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
“பாட்டி… என்ன ஆச்சு உங்களுக்கு…” என்றவன், “கல்யாணம் எல்லாம் எதுவும் எனக்கு வேண்டாம்… இப்போ என்ன அவசரம்...” என்றான்…
அதற்கு, “அவசரம் தான் சமரா” என்றார் உமையாள் உறுதியாக.
அதில் வேறுவழியின்றி ஈத்தன், “நீங்க மட்டும் போதும் பாட்டி எனக்கு… கல்யாணமெல்லாம் வேண்டாம்…” என்றான்.
‘வயசு பையன் பேசும் பேச்சா இது’ என்று நினைத்த உமையாள்…
“என்னால் உன் கூட தொடர்ந்து இருக்க முடியாதுன்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும் சமரா…”, என்றவர், “கல்யாணம் பண்ணிக்கோ” என்றார் முடிவாக.
அதற்கு “மாட்டேன் பாட்டி” என்று உறுதியாக மறுத்தான் அவனும்.
அதில், “தேவையில்லாத விஷயம் எதையும் மனசில் போட்டுக்காதே சமரா… பாட்டி உன் நல்லதுக்கு தானே சொல்வேன்… இதில் எந்த பொண்ணை உனக்கு பிடித்து இருக்குன்னு பாரு… எல்லாருமே ரொம்ப நல்ல குடும்பம்… உனக்கு ஏற்றப்போல் தான் பார்த்திருக்கேன்…” என்றார் அவனிடம் பல வரன்களை காட்டி…
எப்பொழுதுமே அவரை ஈத்தன் எதிர்த்து பேசியது இல்லை…
அவர் கூறியது போல் அவனுக்கு அவர் நல்லதை மட்டும் தான் செய்திருக்கிறார்…
ஆனால் இம்முறை அவர் கூறுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை விட, அவனுக்கு சுத்தமாக அதில் விருப்பமே கிடையாது…
அதில், உமையாளின் இரண்டு கரத்தினையும் பிடித்து அதில் தன் முகத்தினை புதைத்தவன்… “என்னை உங்களை எதிர்த்து பேச வைக்காதிங்க பாட்டி… ப்ளீஸ்… வேண்டாம்…” என்றவன்,
“என்னால் இன்னொரு முறை ஏமாற்றங்களை தாங்க முடியாது பாட்டி… அதை நினைச்சாலே யார் மேலேயும் எனக்கு நம்பிக்கையே வர மாட்டுது… இவங்க என்னை விட்டுட்டு போயிடுவாங்களோன்ற சந்தேக எண்ணத்துடன் என்னால் யார்கூடவும் சாதாரணமா கூட பழக முடியலை… இதில் எங்கிருந்து பாட்டி என்னால் கூட வாழ முடியும் சொல்லுங்க… எனக்கு மட்டும் இல்லை அது என்கூட வாழ வரவங்களுக்கும் தானே கஷ்டம் பாட்டி…” என்று தெளிவாக கூறியவன்,
“ஒருசில சந்தோஷத்துக்காக இப்ப இருக்க நிம்மதியை இழக்க நான் தயாராயில்லை… என்னை திரும்ப திரும்ப நோ சொல்ல வைக்காதிங்க பாட்டி… ப்ளீஸ்… உங்க சமரா பாவமில்ல” என்றவன் முகம், ‘தயவுசெய்து என்னைவிட்டுவிடு’ என்று கெஞ்ச, உமையாள் அம்மாவின் முகம் அப்படியே அசைவற்று நின்றுவிட்டது.
அதற்கு மேல் அவரால் என்ன பேச முடியும்.
அதிலும் ஈத்தனின் பதில்கள், அவன் என்றோ இதைப்பற்றியெல்லாம் யோசித்து முடிவெடுத்திருக்கின்றான் என்பதை உமையாளுக்கு உணர்த்த… பேரனின் எதிர்காலம் அவருக்கு கிலியை கொடுத்துவிட்டது…
உடன் பேரன் சரியாகிவிட்டான் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு, அவன் இன்னுமே தன் பன்னிரெண்டு வயதில் இருந்து மீண்டு வரவில்லை என்பதில் அப்படியொரு வருத்தம்…
இதைக்குறித்து பிறகு பேசலாம் என்று முடிவெடுத்து அதை அவர் தள்ளி வைக்க… ஈத்தனுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக மூச்சே வெளிவந்தது…
அனைத்தையும் மனதில் குறித்து வைத்துக்கொண்ட உமையாள் அம்மாவின் முழு சிந்தனையையும் ஈத்தனே ஆக்கிரமிப்பு செய்துக்கொள்ள…
இரண்டு நாட்களிலேயே தானாய் அவரின் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய துடிப்பு அதிகரிக்க, தலை சுற்ற ஆரம்பித்தது அவருக்கு…
உடன் முழுநேரமும் செவிலியர் இருந்ததால் தப்பித்தார் அவர்…
வீட்டிற்கே வந்த மருத்துவர் உமையாளை பரிசோதித்து பார்த்துவிட்டு…யோசனையாக ஈத்தனிடம் வந்தவர்…
“நல்லா தானே பாட்டி இருந்தாங்க ஈத்தன். திடீர்னு என்ன ஆச்சு அவங்களுக்கு” என்றவர், சிறிது நேரம் அவனிடம் பேசிவிட்டு சென்றுவிட…
அறைக்குள் நுழைந்த ஈத்தன் உமையாளிடம் நேரடியாக, “இதுக்கு காரணம் நான் தானே பாட்டி” என்றான் வருத்தமாக.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை ஐயா” என்று அவர் அவனை சமாதானம் செய்ய…
“என்மேல் பிராமிஸ் பண்ணுங்க பாட்டி” என்றான் தன் கையினை நீட்டி…
அதில் பதறிய உமையாள்… “சத்தியமெல்லாம் எதுக்கு சமரா…” என்று அவன் கையினை தட்டிவிட்டார்…
அதில் ஈத்தன் அமைதியாகிவிட…
தட்டிவிட்ட அவனுடைய கையை மீண்டும் பிடித்துக்கொண்ட உமையாள்…
“என்னோட சமரா, மனைவி குழந்தைகள்ன்னு, அழகான ஒரு பாச கூட்டில், இன்புற்று வாழனும்ற ஆசை, எனக்கு இருக்க கூடாதா சமரா? என்று கேட்டார்.
அதற்கு ஈத்தன், “நியாயமான ஆசை தான் பாட்டி. ஆனால் உங்க சமரனுக்கு அப்படியெதுவும் ஆசையில்லையே பாட்டி. என்ன பண்றது” என்றான் முகம் கசங்க.
“அது எப்படி இல்லாமல் போகும்” என்றவர்…
“அழகான குட்டிப்பொண்ணு, அப்படியே லட்டு மாதிரி, ‘அப்பா’-ன்னு உன்னை கூப்பிட்டப்படியே, உன்கிட்ட ஓடி வந்தா உனக்கு பிடிக்காமல் போய்டுமா சமரா… இல்லை அந்த லட்டுவை பிடிச்சு வச்ச அவங்க அம்மாவை தான் உனக்கு பிடிக்காமல் போயிடுமா…” என்று புன்னகையுடன் அவர் கேட்க…
அவர் பின்னால் சொன்னவை எதுவும் அவன் காதிற்குள் செல்லவில்லை… ஏனென்றால் அவர் முன்பு சொன்ன, குட்டி லட்டு பெண்… ஈத்தனின் மனக்கண்களின் முன்பு ஓடிக்கொண்டு இருந்தாள்…
‘அழகு பேபி’ என்று அந்த கற்பனையில் லயித்துவிட்டவன்… சட்டென்று ‘காட்… என்ன நினைப்பு இது’ என்று தன் தலையை குலுக்கிக்கொண்டான்…
ஈத்தன் முகத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த அந்த சிறு ரசனை உணர்வே உமையாளுக்கு நம்பிக்கை தர…
மெல்ல அவனுக்கு வேப்பிலை அடிக்க ஆரம்பித்தார்…
ஆனால் அவனோ அனைத்தையும் அமைதியாக கேட்டுவிட்டு… அவருக்கு இறுதியில் விபூதியடித்து தூங்க வைத்துவிட்டு கிளம்பிவிட்டான்…
அவன் ஆசைகள் அற்றவன் இல்லையே. ஆசைப்பட பயந்தவன் ஆயிற்றே. அதிலும் சுகத்தை விட சுகத்திற்கு பின் வரும் வலிகளை கண்டு சுகத்தையே வெறுத்தவனாகுமே.
உலகின் முதல் உறவுகளே, அவனுக்கு பொய்த்துப்போய் விட்டதில் தான், அவ்வளவு அச்சம் அவனுக்கு… நிரந்தரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அவனை பொறுத்தவரை ‘இல்லை’ என்பது தான்….
அந்தளவிற்கு சூடு கண்ட பூனையான அவன், பாலை குடிக்க மீண்டும் வந்துவிடுவானா என்ன?
ஆனால் அவன் வருவான் என்ற நம்பிக்கையுடன், தினம் ஒரு கதையுடன், உமையாள் அவனை தன் வழிக்கு எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்துக்கொண்டே இருந்தார்…
அவனோ இருபத்தி மூன்று வயதிலேயே, சாமியார் போல், எனக்கு எதுவும் வேண்டாம் என்றுவிட்டு, இசை, பூ, காற்று என்று சுற்றிக்கொண்டு இருந்ததில்… மொத்தமாக சோர்ந்து போனார் உமையாள்…
அதில் அன்று பார்த்து சித்ரலேகா அவருடன் ஃபோனில் பேச வர… பிடிபிடி என்று சித்ரலேகாவை கோபத்தில் பிடித்துவிட்டார்…
எதிர்ச்சையாக அன்று நேரமே வீடு திரும்பிய ஈத்தன் காதிலும் அது விழுந்திருந்தது…
“நீங்க பண்ண வேலையால் இங்க சமரா அவனுக்கு குடும்பமே வேண்டாம்னு இருக்கான் சித்ரா… என்னால் என்ன முயற்சி செய்தும் அவனை மாத்த முடியலை… எனக்கு அப்புறம் அவன் என்ன ஆவானோன்னு அவ்ளோ பயமா இருக்கு சித்ரா… பந்த பாசம் எதுவும் இல்லாமல் வாழ அவன் ஒன்னும் மரக்கட்டை கிடையாதே…” என்றவர், “உனக்கு அவன் மேலே கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா சித்ரா…” என்று திட்ட…
“அம்மா ஈத்தன் என்ன சின்ன குழந்தையா? அவனுக்கு இருபத்தி மூனு வயசு ஆகுது. அவனோட சொந்த காலில் அவன் நிற்கிறான். எங்களை விட பல மடங்கு நல்லா ஷைன் பண்றான். அவனுக்கு அவனை பார்த்துக்க தெரியும். நீங்க வீணா இன்னும் அந்த காலம் மாதிரி பேசாதிங்கமா… அவனுக்கு இப்போ என்ன கல்யாணத்துக்கு முதல்ல அவசரம்… நான் சீக்கிரம் செய்திட்டு பட்டது போதாதா… அவனை அவன் போக்கிலேயே விடுங்க ம்மா… உங்க உடம்பை மட்டும் நீங்க பார்த்துக்கோங்க… எங்களுக்கு அது போதும்…” என்ற சித்ரலேகா அலைப்பேசியை வைத்துவிட…
உமையாளுக்கு தொலைபேசியை தூக்கி அடிக்க வேண்டும் போல் இருந்தது.
ஈத்தனின் அந்த தெளிவு தானே அவரை அப்படி அலைக்கழிப்பு செய்கிறது.
இப்பொழுதே அவ்வளவு தெளிவாக தனக்கு திருமணம் வேண்டாம் என்பவனின் முடிவு மேலும் வயது கூட கூட அதிகரிக்குமே தவிர குறையாதே…
அதிலும் சினிமா துறையில் குடும்பம் குட்டி என்று உண்மையான நிறைவுடன் வாழ்பவர்கள் குறைவே…
ஊருக்காக பாதியும்… கால் போன போக்கில் மீதியும் அல்லவா இருக்கிறது…
அதிலும் சித்ரலேகாவின் முடிவுகள் எப்பொழுதும் அதிக பிராக்டிகலாக இருக்கும்… அவன் இறுதிவரை திருமணமே வேண்டாம் என்றால் கூட அவர் அவனை அப்படியே விட்டுவிட வாய்ப்புகள் அதிகம்…
முன்னாள் மருமகன் ஹன்டர் குறித்து அவருக்கு எந்த அபிப்பிராயமுமே கிடையாது… அவர்களின் கலாச்சாரமே அவருக்கு விளங்கியது இல்லை…
ஆபிரஹாமை ஈத்தனுக்கு தந்தையாக யோசிக்கவும் அவரால் முடியவில்லை…
அதில், “அப்பனே முருகா… என் குழந்தையை காப்பாத்து…” என்று அவர் வாய்விட்டு புலம்ப… ஈத்தனுக்கு அது மிகப்பெரிய வருத்தத்தை தந்து இருந்தது…
தனக்காக பலவற்றை செய்தவருக்கு அவன் இதுவரை என்ன செய்திருக்கின்றான்… செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை… கடைசி காலத்தில் நிம்மதியை கெடுக்கின்றானே…
யாராவது என்னவாவது ஆகட்டும் என்று போகும் அளவுக்கு அவனுக்கு கல் நெஞ்சம் கிடையாதே…
“பாட்டி…” என்று அவர் அறைக்குள் நுழைந்தவன்… “தேவையில்லாமல் உடம்பை போட்டு கெடுத்துக்கறீங்க நீங்க… ஏன் இப்படி” என்றவன்…
“இனி உங்க பொண்ணுக்கிட்ட என்னை பத்தி தயவு செய்து எதுவும் பேசாதிங்க பாட்டி… அவங்களுக்கு அங்க சின்ன குழந்தைங்க இருக்கு. அவங்களுக்கு அழுத்தம் கொடுக்காதிங்க” என்றவன், “அவங்க ஒன்னும் என்னை பார்க்காமல் இல்லை. நான் தானே வந்துட்டேன்…” என்று பழியை தன் மீதே போட்டுக்கொண்டு, “பாவம் பாட்டி அவங்க இப்பவாச்சும் நிம்மதியா இருக்கட்டும்… என்னால் அது கெட வேண்டாம்” என்றவனை பாட்டி கோபமாக பார்க்க…
மெல்லிய புன்னகையுடன் ஈத்தன், “கண்டிப்பா உங்க சமரன் தனிமையில் வாழ மாட்டான் பாட்டி... நம்புங்க... முடிவெடுக்க மட்டும் எனக்கு கொஞ்சம் டைம் தாங்களேன்…” என்று கேட்டான்.
அதில் ஸ்விட்ச் போட்டது போல் உமையாளின் முகம் பளிச்சென்று ஆகிவிட்டது.
இது போதுமே அவருக்கு.
“நேரம் தானே ஐயா… எடுத்துக்கோ… நல்ல முடிவா சீக்கிரம் சொல்லு…” என்றவர்…
“உன் நல்ல மனசுக்கு, நிச்சயம் எல்லாம் நல்லதாவே கிடைக்கும் சமரா…” என்று பெண்களின் ஜாதகம் இருந்த பையினை தூக்கி அவனிடம் தர…
இடது கையால் தன் தலைமுடியினை கோதிவிட்டவன்… அதை வாங்கிக்கொண்டு தன் அறைக்கு வந்துவிட்டான்…
ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு வந்துவிட்டானே ஒழிய அப்படி எதுவும் அவன் மனதில் இல்லை…
கடந்திருந்த ஐந்து வருடங்களில் அவன் பார்க்காத பெண்களே இல்லை எனலாம்…
தமிழ்நாடு தொடங்கி அமெரிக்கா வரை அனைத்து அழகிகளையும் பார்த்துவிட்டு இருந்தான்…
ஆனால் இதுவரை ஒருவரை கூட அவன் மனம் லயித்து ரசித்ததே இல்லை…
இதில் எத்தனையோ, லவ் ப்ரப்போஸல்கள்… டேட்டிங் அழைப்புகள்…
அனைத்திற்கும் பதில் நோ தான்…
காதல் பாடல்களை கேட்பான்… காதல் பாடல்களை பாடுவான்… காதல் பாடல்களுக்கு இசையமைப்பான்… ஏன் சில நேரங்களில் காதல் பாடல்களுக்கு வரிகளை கூட அழகாக எழுதி தருவான்…
ஆனால் காதல் மட்டும் செய்யமாட்டான்?
நம்பிக்கையின்மை என்னும் கருப்பு துணி அவனுடைய இருக்கண்களுக்கும் திரையிட்டுவிட… தன்னை தனிமை படுத்திக்கொள்வதிலேயே முனைப்பாக இருந்துக்கொண்டு இருந்தான்…
கருப்பு திரையை விளக்கி, வண்ண திரையை கட்டிவிட ஒருத்தி வந்துக்கொண்டிருக்கின்றாள் என்பதை அறியாது போனான்…
____________________________
📌Next UD link
தாய் தந்தையரின்
பதிலளிநீக்குதவிர்ப்பும்
தனியாக நிற்கும் ஈத்தன்
தவிப்பும்
தனிமை துயரை
துடைத்திடும் பாட்டியும்
தன்னம்பிக்கையாய் பற்றிக்கொள்ள
துணையாக பாட்டும்....
தீராத ஆசையை
தீர்த்திட துடிக்கும்
தேடி வரும் பாவையும்
திகட்டாத அத்தியாயம்....