9.1- சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!
அத்தியாயம்-9
முதல்முறை ஈத்தன் தன் மகள் உடன் இல்லாது வெளியே வந்ததிலேயே அனைவருக்கும் அத்தனை ஆச்சரியம்!
அவளில்லாமல் அவன் எங்கும் வரமாட்டான் என்பது உலகம் அறிந்த உண்மையாகுமே!
உடன் பணிபுரிபவர்கள் தொடங்கி, சதுரங்க விளையாட்டை பார்க்க வந்திருந்த தொழில்துறை பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருமே அவனிடம் வரிசையாக வந்து, ‘ஈஷா எங்கே?’ என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தனர்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் ஈஷா, தங்களுடன் குறிஞ்சியையும் அழைத்து செல்ல ஈத்தனிடம் கேட்டதும், ஈத்தன், ‘எப்படி? அதுவும் குறிஞ்சியை போய் தங்களுடன் அழைத்துச்செல்ல முடியும்’ என்று திகைத்து நின்ற நேரத்தில், அவன் சற்றும் எதிர்பாராத விதமாக குறிஞ்சியே உடன் வருவதாக கூறிவிட்டு இருந்தாள்.
இருந்தும் அவ்விடத்தில் மகளிற்காக என்பதை காட்டிலும், குறிஞ்சியின் எதிர்காலம் ஈத்தனுக்கு முதன்மையாக பட…
ஈஷாவிடம், “வேண்டாம் பேபி. டேடி உனக்கு சென்னையிலேயே, வேற லேடி கேர் டேக்கர் அரேன்ஜ் பண்றேன் டா. குறிஞ்சி ஆன்ட்டிக்கு இங்க நிறைய வேலை இருக்கும். நாம டிஸ்டர்ப் பண்ண கூடாது. கிளம்பலாம் பேபி” என்றான்.
அதில், “ஓ… ஓகே பேபி... சாரி” என்ற ஈஷாவின் முகம் பட்டென்று வாடி விட்டிருக்க...
அவ்வளவு தான், ஏற்கனவே காலை ஈஷா, குளிக்க வைக்கும் விஷயத்தில் கேட்டதிலேயே, குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருந்த குறிஞ்சிக்கு, ஈஷாவின் அவ்வாடிய முகமும், பரிதவிப்புகளும், உள்ளுக்குள் கொடுக்கும் உணர்வுகளை தாங்கவே முடியவில்லை.
நொடியில் அவளுக்கு அவளே போட்டுக்கொண்டிருந்த விளங்குகள் அனைத்தையும் கட்டவிழ்ந்துவிட, “சமர் சார், ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. நான் மதர் கிட்ட லீவ் சொல்லிட்டு, கிளம்பி வந்துடறேன். உண்மையிலேயே எனக்கு இப்போதைக்கு இங்க பெருசா எந்த வேலையுமில்லை. அப்படியிருந்திருந்தா நானே வரேன்னு சொல்லி இருக்க மாட்டேன். மேக்சிமம் நாலு நாள். அதுக்குள்ளே ஈஷா நார்மல் ஆகிடுவாங்க. அதுவரை நான் பார்த்துக்கிறேன்” என்ற குறிஞ்சி, ஈத்தனின் பதிலையே எதிர்பார்க்காது வெளியேறியிருந்தாள்.
ஆம் அவனிடம் அனுமதி கேட்கவில்லை. தகவல் மட்டுமே கொடுக்கப்பட்டது.
மதர் சுப்பீரியரிடம் சென்று விஷயத்தை கூறி, குறிஞ்சி விடுமுறை கேட்க, உடனே கொடுத்து அவளை அவர் அனுப்பி இருந்தார்...
காலை ஈத்தன் கிளம்புகிறேன் என்று உறுதியாக நிற்கும் போது மதரால் ஒன்றும் கூறியிருக்க முடியவில்லை.
அவன் பழகுவதற்கு மிக எளிமையானவனாக இருந்தாலும், அவனின் உயரம், அவனின் முடிவுகளுக்கு மாறாக எதிர்த்து பேசும் அளவிற்கு மதர் சுப்பீரியரை விடவில்லை என்பதே நிதர்சனம். மனம் கேட்காமல் தான், சரியென்றுவிட்டு தேவாலயத்திற்கு கிளம்பி இருந்தார்.
அதிலும் நேற்று ஒரே ஒரு வார்த்தை தான் அவனிடம் சொன்னார். இப்பள்ளியின் மூலம் வரும் பெரும் தொகையையும், நன்கொடையையும் வைத்து, சில இலவச பள்ளிகள் விடுதியுடன் சேர்த்து தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களிலும் அங்காங்கே தாங்கள் இயக்கி வருவதாக.
உடனே ‘என்ன ஏது’ என்று முழு விவரம் கேட்டுக்கொண்ட ஈத்தன், நேற்று மாலை அவர் கையில் கொடுத்திருந்த காசோலையில் இருந்த தொகை, அவர் தன் வாழ்நாளில் இதுவரை சேர்த்த நன்கொடைகளை சில மடங்குகள் தாண்டி இருந்தது.
சக உயிரினங்களுக்கு கிள்ளி கொடுப்பதற்கே ஆயிரம் முறை யோசிக்கும் சமூகத்தில், தேவனாக அள்ளி கொடுத்திருந்தான்.
அப்பேர்ப்பட்டவனின் மகளுக்கு தங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தவர், ஜெபத்தில் இதனை ஆண்டவரிடம் முறையிட…
இதோ ஒரு வழி கிடைத்துவிட்டு இருந்தது.
அதிலும் குறிஞ்சியின் நிதானமும், பொறுப்பும், காருண்யமும் நிறைந்த அணுகுமுறை, தாயுடனில்லாத குழந்தைக்கு இதமாக இருக்கும் என்று நினைத்தவர்.
“லீவ் எதுவும் எடுக்க வேண்டாம் குறிஞ்சி. டியூட்டிலயே போய் வா மா. குழந்தையை நல்லா பார்த்துக்கோ. அது போதும். நான் இங்க வேற ஆள் டியூட்டிக்கு மாத்தி விட்டுடறேன்” என்று, தன் கைப்பையில் இருந்த பணத்தை எடுத்து அவள் கையில் கொடுத்து, “அவசர செலவு எதுவும் வரலாம் குறிஞ்சி, கூடுதலா பணம் வச்சிக்கோ. எதுனாலும் எனக்கு உடனே கூப்பிடு” என்றவர் தொடர்ந்து, “ஈத்தன் குணம் எனக்கு தெரியும். இருந்தாலும் அங்க இருக்க மத்தவங்களாம் யார் என்னன்னு நமக்கு தெரியாது. நீதான் உன்னை பார்த்துக்கனும். ஜாக்கிரதை குறிஞ்சி” என்று அவளுக்கும் பத்திரம் கூறி அவர் அனுப்ப…
எங்கே ஈத்தன் தன்னை விட்டு சென்று விடுவானோ என்ற பதட்டத்தில், புயல் வேகத்தில் தன் வீட்டிற்கு ஓடியவள், அங்கிருந்த ஒரு பையில் கையில் கிடைத்த தன்னுடைய நான்கு உடைகளை திணித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
குறிஞ்சியின் கருணை குணம் ஏற்கனவே ஈத்தனுக்கு தெரியும் என்பதால், அவளின் இச்செயல்கள் எதுவும் அவனுக்கு ஆச்சரியத்தை தரவில்லை. மாறாக குறிஞ்சிக்கு வீணாக தொல்லை கொடுக்கிறோமே என்ற கவலையை தான் அவனுக்கு தந்தது.
அதிலும் சற்றுமுன்னர் அவள் வாய் திறந்தே, தன்னை தெரிந்துக் கொண்டவாறு காட்டிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டு இருந்தாளே!
மனம் அங்கும் இங்கும் பயணிக்க…
மனதின் ஒரு மூலையில் குறிஞ்சி தன் மகளை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்ற நிம்மதி பரவியதையும் அவனால் தடுக்க முடியவில்லை.
தன் குழந்தைக்கு கிடைக்கும் அனைத்துமே சிறந்தவையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சராசரி தந்தை தான் அவனும்.
காரணங்கள் வேறாக இருக்கலாம்.
ஆனால் இரண்டு உள்ளங்களுமே இறுதியில், குழந்தைக்கு என்ற ஒற்றை புள்ளியில், சங்கமித்து இருந்தன.
____________________________
அன்று காலையில் இருந்து அனைவருக்கும் பதில் கூறியே களைத்திருந்த ஈத்தனிடம் வந்த சக்தி நூறாவது முறையாக, “ஏன் தலைவரே? யார்னே தெரியாத அந்த நர்ஸம்மா கிட்ட போயிட்டு எப்படி நீங்க நம்ம பாப்பாவ விட்டுட்டு வரலாம்…?” என்று கேட்க…
“அவங்க நம்பிக்கையானவங்களா தெரிஞ்சாக சக்தி. அதனால் தான் விட்டுட்டு வந்தேன். அதுவும் இல்லாமல் செக்யூரிட்டி கார்ட்ஸ் தான் கூட இருக்காங்களே… அப்புறம் என்னடா உனக்கு?” என்றான் ஈத்தனும் நூறாவது முறையாக…
அதற்கு, “அது எப்படி தலைவரே அதுக்குள்ளே அவங்க நம்பிக்கையானவங்கன்னு உங்களுக்கு தெரிய வந்திருக்கும்…” என்று முணங்கிய சக்தி, ஈத்தனின் முகத்தை பற்றி அப்படி இப்படி என்று திருப்பி பார்த்து, “சம்திங் ஃபிஷ்ஷி” என்றுவிட்டு வெளியில் வந்தவன்…
‘கேரவன்ல ஈஷாவ விட்டுட்டு வந்தாலே இவருக்கு மனசு பொறுக்காது. கங்காரு அது குட்டிய தூக்கி வச்சிக்கிற மாதிரி ஈஷாவ கூடவே வச்சிருந்தா தான் இவர் நிம்மதியாவே இருப்பாரு. இன்னைக்கு என்னனா! என்னவோ எல்லாமே தப்பாவே படுது!’ என்று நினைத்தவன், ‘எப்படி இந்த மனுஷன் ஈஷாவ விட்டுட்டு வந்தும், டென்ஷனே இல்லாமல் இருக்கார்?’ என்று உள்ளுக்குள் புலம்பி புலம்பி அவனுக்கு டென்ஷன் ஏறியது தான் மிச்சம்.
அதில் அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் ஈத்தனிடம் வந்தவன், “தலைவரே இத்தனை வருஷம் இல்லாம இப்ப என்ன திடீர்னு கேர் டேக்கர் எல்லாம். அதுவும் அந்த நர்ஸ் தான் சரியான ஆள்னு, எப்படி தேர்ந்தெடுத்து கூட்டிட்டு வந்தீங்க? அப்படி என்ன அவங்ககிட்ட ஸ்பெஷல் டேலண்ட் இருக்கு. சர்வீஸ் கூட பெருசா இருக்காது போலயே தலைவரே” என்று சி.ஐ.டி போல் கேட்டுக்கொண்டே போனவனை பார்த்த ஈத்தன் பொறுத்தது போதும் என்று கையில் கிட்டாரை தூக்கிவிட்டான். பின்னே எத்தனை தடவை தான் ஒரே கேள்விக்கு அவன் பதில் கூறுவது.
“உனக்கு இப்ப என்னடா தெரியனும்…?” என்று ஈத்தன் கோபமாக கேட்க.
அதில் “தலைவருக்கு என்ன புதுசா கோவம் எல்லாம் வருது… ஓ மை மம்மி!” என்று அரண்டு அப்படியே ஓடிவந்துவிட்டவனுக்கு, கேள்விகள் மட்டும் மண்டைக்குள் நிற்காமல் உதயமாகிக்கொண்டே இருந்தன.
ஈத்தன் அவ்வளவு எளிதில் என்பதை விட, இத்தனை வருடங்களில் சக்தி பார்த்தவரை யாரையுமே ஈஷாவிடம் ஈத்தன் நெருங்கவிட்டது இல்லை.
அதிலும் அவனுக்கு கூட அனுமதி இல்லாத மேல் தளங்களுக்கு எல்லாம், எப்படி அந்த நர்ஸை மட்டும் ஈத்தன் அனுமதிக்கலாம் என்று வேறு ஒருப்புறம் பயங்கர புகைச்சல்.
உடன் நிழலாக சுற்றி வருபவனுக்கு நிஜத்தின் மாற்றம் தெரியாமல் போகுமா?
ஈத்தன் ஈஷாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டுமே அனைவரிடமும் கூறி இருந்தான். மகளின் தனிப்பட்ட விஷயம், அதுவும் உடல் மாற்றத்தை போய் மற்றவர்களிடம் பகிர அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை.
வேலை பரபரப்பில் ஈத்தனுக்கு அடுத்த நான்கு தினங்களும் ஜெட் வேகத்தில் பறந்து ஓடிவிட்டிருக்க, சதுரங்க போட்டியும், ஈத்தனின் இசை நிகழ்ச்சியில் ஆரம்பித்து, அவனின் இசை நிகழ்ச்சியுடனே திருப்திகரமாக முடிந்திருந்தது.
உடன் குறிஞ்சி கிளம்ப வேண்டிய நேரமும் வந்துவிட்டு இருந்தது.
ஈத்தனுடன் தனிமையில் இருக்கும் படியாக அமைந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் கவனமாக அவள் தவிர்த்துவிட்டதில், எந்த குழப்பமும் இல்லாது, அவள் வந்த வேலை நிறைவாக முடிந்துவிட்டது.
‘நர்ஸாக உடனிருந்து பார்த்துக்கொள்கிறேன்’ என்று அவள் கூறியது, ஈத்தனுக்காக இல்லை… அவளுக்கு அவளே கூறிக்கொண்டது… ஈஷாவுடன் இருந்த இந்த நான்கு நாட்களுள் நாலாயிரம் தடவைகளுக்கு மேல், அதை அவளுக்கு அவளே, தன் உணர்வுகளை அடக்க
அழுத்தமாக கூறிக்கொண்டு இருப்பாள்…
உணர்வுகளை அடக்கி, இதோ வந்த வேலையையும் வெற்றிகரமாக முடித்துவிட்டாள். கிளம்ப வேண்டியது தான்.
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
Super
பதிலளிநீக்குபசுமையான நீங்கா
பதிலளிநீக்குபழைய நினைவு தாக்கம்
பாதுகாப்பில் தெரிய...
பக்கம் இருந்து
பார்த்துக் கொண்டவளும் பக்குவமாய் இருந்திட...
பதில் தெரியாத கேள்வி
பல இருப்பினும்
புரியாத விஷயங்களை
பார்த்துக் கொண்டே புலம்பித் தள்ளும் சக்தி...