16.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!
அத்தியாயம் -16
முதலில், என்ன திடீரென ஒரு பெண் வந்து, தன்னிடம் இப்படியெல்லாம் பேசுகின்றாள், என்ற சங்கடத்தில் நின்ற ஈத்தனை, குறிஞ்சியின், ‘என் ஆயுசு இருக்கும் வரை, வருஷத்துக்கு ஒன்னுன்னு எத்தனை குழந்தை வேண்டும்னாலும் உங்களுக்கு பெத்து தரேன் சார்… பிராமிஸ்…’ என்ற வாக்கியம் அசைக்க…
அவனுடைய மார்பளவு உயரத்தில் இருந்தவளின் முகத்தை உற்றுப்பார்த்தான்…
அவளும் அவனை தான் தன் கழுத்தை முழுதாக நிமிர்த்தி தவிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்…
இலகுவான பர்கண்டி நிறத்திலான(deep reddish purple) மருத்துவமனை சீருடையான, பேண்ட் மற்றும் சட்டையில்…
வெள்ளை என்றோ, இல்லை மாநிறம் என்றோ, ஒருக்கோட்டில் நிறுத்த முடியாத இளம் எலுமிச்சை நிறத்தில், சிறிய வட்ட முகம், அதற்கு ஏற்ற அளவில் சிறிய கூர் நாசி, இளஞ்சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் போட்ட முழு வடிவம் பெற்ற சிறிய இதழ்கள், அழுவதில் சிவந்திருந்த சற்று பெரிய கண்கள், அதை சுற்றி போட்டிருந்த மேக்அப் தாண்டி தெரிந்த கருவளையம், என்று இருந்தவளுக்கு நிச்சயம் வயது 17… 18… தான் இருக்கும் என்று தோன்றியது ஈத்தனுக்கு… ஆனால் இல்லை என்றது அவளின் வேலை…
அவன் பார்ப்பதை அவளும் உணர்ந்திருந்தாள் தான்…
அதில், “ஏன் சார்... உங்க அளவுக்கு நான் கலரா இல்லைன்னு பார்க்கறீங்களா..?” என்றவள் கண்கள், அவள் கட்டுப்படுத்தி வைத்திருந்த நீரை சரசரவென கொட்ட…
ஈத்தனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது…
“Hey… வாட்ஸ் ராங்க்? வாட் ஹேப்பண்ட்?” என்றவன், “அழாத கேர்ள்… பிளீஸ்” என்றுக்கூற…
குறிஞ்சிக்கு அப்பொழுது தான் அவள் அழுவதே உரைத்தது…
கண்களை வேகமாக துடைத்தவள், “என்னை பிடிக்கலையா சார் உங்களுக்கு…?” என்று கேட்டாள்.
அவளுக்கு தெரிந்து பெரும்பாலும், கருமுட்டையுடன் சேர்த்து வாடகை தாயாக தேர்ந்தெடுக்கும் பெண்ணிடம், உடல் நலன் தாண்டி பணம் கொடுப்பவர்கள் முக்கியமாக எதிர் பார்ப்பது இரண்டு விஷயங்கள் தான்.
ஒன்று நல்ல அறிவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த கருமுட்டையில் உருவாகும் தங்கள் குழந்தையும் அறிவாக இருக்கும் என்பது தான் அதற்கு காரணம். அடுத்தது வாடகை தாய் நல்ல அழகுடன் இருக்க வேண்டும். அப்பொழுது தானே குழந்தை அம்மா சாயலில் பிறந்தாலும் கண்களுக்கு நன்றாக இருக்கும்.
சட்டம் நூறு சொன்னாலும், வெளியில் பெற்றுக்கொள்வது என்று ஆகிவிட்ட நிலையில், அதுவும் அவ்வளவு பணம் தர போகின்றார்கள் என்னும் போது, பார்த்து பார்த்து விருப்பமானதை தேர்வு செய்துக்கொள்ள வேண்டியது தான்.
அதற்காக தான் குறிஞ்சி, முன்னர் தன் மதிப்பெண்ணை கூறி, சர்டிஃபிகேட்ஸ் அனைத்தையும் ஈத்தனுக்கு காட்டுகிறேன் என்று இருந்தாள்.
இப்பொழுது அவள் நிறத்திற்கு என்ன செய்வது?
அதுவும் கண் முன்பு இருப்பவன் வேறு, சிறு வயதில் கார்டூன் கதைகளில் பார்த்த இளவரசன் போல் அல்லவா, நெடுநெடுவென்று, பளிங்கு நிறத்தில், கிளீன் ஷேவில், பெரிய அடர் புருவங்களுடன், அதுவும் விளையுயர்ந்த பொம்மைகளுக்கு மட்டும் இருக்கும் நீல கண்களுடன் இருக்கின்றான்…
என்ன செய்வது…? வேண்டாம் என்று விடுவானோ…? ஆம் அப்படி தான் சொல்வான் போல…
என்று உள்ளுக்குள் அவள் உழன்றுக்கொண்டிருக்க…
அவளின் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதிலாக ஈத்தன், “உனக்கு நான் ஹெல்ப் பண்றேன் கேர்ள்” என்றிருந்தான்…
அதில் சட்டென்று குறிஞ்சியின் முகம் மலர, “அப்ப உங்களுக்கு பேபி பெத்து தர, என்னை நீங்க செலக்ட் செய்துட்டீங்களா சார்? தேங்க் யூ சோ மச் சார். நான் கண்டிப்பா நீங்க எதிர்ப்பார்த்த மாதிரியே பத்திரமா பெத்து தருவேன்…” என்று அவள் பேசிக்கொண்டே போக…
“வெயிட் வெயிட்…” என்றவன். “எனக்கு பேபி வேண்டாம்…” என்றுக்கூற
சற்று தெளிந்திருந்த குறிஞ்சியின் முகம் சடுதியில் மீண்டும் இருண்டு விட்டது… இப்பொழுது வெளிப்படையாகவே அவளின் நெஞ்சம் உணர்ச்சி வேகத்தில் மேலெழுந்து தனிய… அழுத்தமாக பல்லை கடித்து, கண்களில் தேங்கிய நீரை விழவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்…
அதில், “காட்… நான் தான் ஹெல்ப் பண்றேன் சொன்னேன் இல்ல… இன்னும் ஏன் இந்த அழுகை…” என்ற ஈத்தன்… அருகில் யாரோ வருவதை உணர்ந்து… பட்டென்று தன் கூலர்ஸ் மற்றும் மாஸ்க்கை அணிந்துக்கொண்டு….
“உனக்கு எவ்ளோ பணம் வேண்டும். சொல்லு கேர்ள் நான் தரேன்” என்றான் நேரடியாகவே…
அதில் “எனக்கு நிறைய வேண்டுமே...” என்றவள்… “உங்களுக்கு உண்மையா பேபி வேண்டாமா?” என்று மீண்டும் சந்தேகமாக கேட்க…
“Leave that” என்றவன்… “உன் விஷயத்தை மட்டும் சொல்லு” என்றான்…
அதில், “அம்மாக்கு… அம்மாக்கு உடம்பு ரொம்ப சரியில்லை” என்றவளுக்கு மீண்டும் அன்னையின் நினைவில் அழுகை வர… கட்டுப்படுத்த முடியவில்லை…
“டாக்டர் முதுகு தண்டில் சீக்கிரம் ஆப்ரேஷன் பண்ணனும் சொல்றாங்க…” என்றவள், “ரொம்ப வலியில் இருக்காங்க அம்மா…”, என்று தேம்பியப்படியே அனைத்தையும் கூற…
ஈத்தனுக்கு, ‘வேற வழியில்லாமல் குடும்ப கஷ்டத்துக்கு தான் குழந்தை பெத்து தர வருவாங்க ஈத்தன்’ என்ற மருத்துவரின் வார்த்தைகள் தான் கண்முன் வந்து சென்றது… வறுமை எவ்வளவு கொடியது என்று தோன்ற…
“ஓகே ஓகே… சாரி…” என்று அவளை நிறுத்திய ஈத்தன், “நாம உடனே ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம்… அழக்கூடாது… தைரியமா இருக்கனும்… அம்மா சரியாகிடுவாங்க…” என்றவன்… தன் வேலட்டை எடுத்து அவள் கையில் ஒரு கார்ட்டை கொடுத்து… “உன் அம்மாவோட மெடிக்கல் ஹிஸ்டரி அண்ட் இப்ப பார்க்கும் ஹாஸ்பிடல், டாக்டர், பேங்க் டீட்டெயில்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா, நான் பணம் தரேன்” என்றவனுக்கு…
அப்பொழுது தான் அவள் கையில் சில்வர் கார்டிற்கு பதிலாக, கோல்ட் கார்ட் தந்துவிட்டது புரிந்தது.
சில்வர் ஆஃபீஸ் கார்ட். கோல்ட் வீட்டு கார்ட்.
அதற்குள் “ரொம்ப நன்றி சார்…” என்று அதை பத்திரமாக தன் பேக்கெட்டில் வைத்துக்கொண்ட குறிஞ்சி, “எனக்கு ஷிஃப்ட் நைட் 11 மணிக்கு தான் முடியும் சார்… நான் நாளைக்கு வந்து உங்களை பார்க்கவா… எத்தனை மணிக்கு வரனும் சொல்லுங்க சார்… நான் சரியா வந்துடறேன்…” என்று கேட்க.
“மார்னிங் 9 வரை நான் வீட்டில் தான் இருப்பேன். அதுக்குள்ளே வர முடியுமா” என்றான்.
“கண்டிப்பா சார். வந்துடறேன்” என்றவளுக்கு நடப்பது எல்லாம் கனவு போல் இருந்தது. இன்னும் முழுதாக நம்ப முடியாத நிலை தான்…
அதில், “உண்மையிலேயே உங்களுக்கு நான் பேபி பெத்து தர வேண்டாமா சார்… அது இல்லாமலே எனக்கு ஹெல்ப் பண்ண போறீங்களா” என்று தவிப்புடன் அவள் கேட்க.
“நம்பு கேர்ள்” என்ற ஈத்தன்… என்ன நினைத்தானோ, அவள் கன்னத்தில் லேசாக தட்டி, “இனி தெரியாத யார்கிட்டேயும் போய்ட்டு இப்படிலாம் பேசக்கூடாது” என்றவன்…
“என் நம்பர் நோட் பண்ணிக்கோ…”, என்று அவனின் தொலைபேசி எண்ணை கூறியவன்… “அப்படியே எனக்கு ஒரு ரிங் கொடு…” என்றான்…
கீ கொடுத்த பொம்மை போல் குறிஞ்சி அனைத்தையும் செய்ய….
தன் மொபைலை எடுத்த ஈத்தன், “உன் நேம்…. ரோஜா… ரோஜா தானே” என்று சேமிக்க கேட்க…
“இல்லைங்க சார். குறிஞ்சி மலர்” என்றவள்… தன் ஐடென்ட்டி கார்டை தூக்கி அவனுக்கு காட்ட… ஈத்தன் பதிவு செய்துக்கொண்டு…
“ஓகே குறிஞ்சி. நாளைக்கு பார்க்கலாம்” என்றான். கிளம்பும் பொருட்டு.
“ரொம்ப நன்றி சார். உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு” என்று தன்னிரு கரம் கூப்பிய குறிஞ்சி… “நான் கண்டிப்பா உங்க காசை எப்படியாவது திருப்பிடுவேன்” என்றுக்கூற…
“ஹேய்… என்ன இதெல்லாம்…” என்று அவளின் கூப்பிய கரத்தினை பிடித்து கீழே இறக்கிவிட்ட ஈத்தன்…
“டேக் கேர்…” என்றுவிட்டு கிளம்பிவிட…
கடவுளையே நேரில் பார்த்த பரவசத்தில் இருந்தாள் குறிஞ்சி. இந்த காலத்தில் யார் பிரதிபலன் எதிர்பாராது உதவுவார்கள். அதுவும் இவ்வளவு பெரிய உதவி.
அதிலும் அவன் அக்கறையாக கன்னத்தில் தட்டி கூறியதை நினைத்தவளுக்கு… நெஞ்சமெல்லாம் அப்படி ஒரு உணர்வு… தன் இருபத்தியோரு வயது அனுபவத்திற்கு, இதுவரை இப்படியான தூய ஆன்மாவை எல்லாம் அவள் கண்டதே இல்லை…
அவளுக்கு ஈத்தன் யார், அவனின் உயரம் என்ன, புகழென்ன, எதுவுமே இந்த நிமிடம் வரை தெரியாது…
அவளுக்கு தெரிந்தது எல்லாம் அவன் நல்லவன் அவ்வளவே!
ஈத்தன் வருவதற்கு முன்னர் வந்த கர்ப்பிணிப்பெண்ணை மருத்துவர் உள்ளே இருந்த படுக்கையில் வைத்து பரிசோதித்து இருக்க… இவள் உள்ளே அந்த படுக்கையில் இருந்த ஷீட்டை எடுத்துவிட்டு… வேறு மாற்றி சுத்தம் செய்துக்கொண்டிருந்த போது தான் ஈத்தன் வந்து மருத்துவருடன் பேசியதை அவள் கேட்க நேரிட்டு இருந்தது… அங்கு வேறு யார் இருந்தாலும் கேட்டு தான் இருப்பார்கள்…
முதலில் அவர்கள் பேசுவதில் பெரிதாக கவனமில்லாமல் இருந்த குறிஞ்சி, அவன் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று கூறியதை கேட்டு, அதில் கவனமாகிவிட்டாள்…
அவனின் பின்புறத்தை மட்டும் லேசாக பார்த்து இருந்தவள், அவனின் பிரத்யேகமான பர்ஃபியூம் மணத்தை வைத்து தான் அவனை ஓடிவந்து பிடித்து இருந்தாள்…
மீண்டும் மருத்துவமனைக்கு உள்ளே வந்த குறிஞ்சி, தன் பேக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து தன் பார்வையை அதில் பதித்தாள்…
உமையாள் இல்லம் என்று பெரிதாக ஆங்கிலத்தில் எழுதியிருக்க… அதன் கீழே வீட்டின் முகவரி தெளிவாக அச்சிடப்பட்டு இருந்தது…
தங்களின் வீட்டில் இருந்து அங்கு போக எவ்வளவு நேரம் என்று அவள் மனதில் கணக்கிட்டு கொண்டிருக்க…
அதே நேரம் காரில் சென்றுக்கொண்டிருந்த ஈத்தனின் எண்ணம் முழுவதும் குறிஞ்சி தான் நிறைந்து இருந்தாள்…
அவ்வளவு பாவமாக இருந்தது அவனுக்கு அவளை நினைத்தாலே…
அம்மா மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தால், இப்படி வந்து தன்னிடம் பேசி இருப்பாள் என்று தோன்ற…
ஈத்தனின் இதழ்களின் ஓரம் விரக்தியான ஒரு புன்னகை…
‘பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு’ என்று எந்த முட்டாள் எழுதி வைத்தது என்று இன்றுவரை அவனுக்கு தெரியவில்லை…
பிள்ளை மனம் கல்லாக இருந்திருந்தால், இப்படி ஒருத்தியால் பெற்றவருக்காக பிள்ளை பெற்று தர முன் வந்திருக்க முடியுமா…?
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🦋
கருத்துகள்
கருத்துரையிடுக